ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் ' விவாகரத்துக்கான ' வரைவு உடன்படிக்கையில் ஒன்றியத்தின் தலைவர்கள் கைச்சாத்திட்டிருக்கிறார்கள். ஆனால், பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேயின் மல்லாட்டம் முடிவுக்குவரக்கூடிய சாத்தியமில்லை. அந்த உடன்படிக்கைக்கு  பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப்பெற வேண்டிய மிகுந்த பொறுப்புவாய்ந்த பணியை இப்போது அவர் செய்வேண்டியிருக்கிறது. பாராளுமன்றத்தில் தனது பக்கத்தில் போதுமான எண்ணிக்கையில் ஆசனங்கள் இல்லாதிருக்கின்ற ஒரு நேரத்தில் அந்தப் பணியை செவ்வனே நிறைவேற்றுவதென்பது பிரதமருக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

       

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய 27 நாடுகளின் தலைவர்களும் அவநம்பிக்கையையும் விசனத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் சூழ்நிலைக்கு மத்தியில், ஒன்றியத்தில் இருந்து  வெளியேறிய பிறகு ( பிரெக்சிட்டுக்கு பிற்பாடு) பிரிட்டன் மேலும் கூடுதலானளவுக்கு சுயாதிபத்தியத்தையும் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முழுமையான ஆதிக்கத்தையும் கொண்ட செழிப்பும் வனப்பும் மிகுந்த நாடாக விளங்கும் என்று உருவகப்படுத்திக் காண்பிக்க தெரேசா மே முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

        

பாராளுமன்றத்தின் ஜனப்பிரதிநிதிகள் சபையில் ( House of Commons) மொத்தமாகவுள்ள 650 உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 320 பேரின் ஆதரவை அவர் எவ்வாறு பெறப்போகின்றார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டியிருக்கிறது. பிரதமரின்  கன்சர்வேட்டிவ் கட்சியின் 315 பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் எதிர்த்துக் கிளம்பப்போவதாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்துக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் 10 உறுப்பினர்கள் வட அயர்லாந்துடன் தொடர்புடைய விவகாரங்கள் மீதான அதிருப்தி காரணமாக வரைவு உடன்படிக்கையை ஆதரிக்கும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

பிரெக்சிட் பிரிட்டனை மேலும் பலவீனப்படுத்தி உலக அரங்கில் அதை பெருமளவுக்கு செல்வாக்குச் செலுத்த இயலாத நாடாக்கப்போகிறது. உலகின் முக்கியமான பொருளாதார வல்லமை கொண்ட நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை தனது அரசாங்கம் செய்யும் என்று பிரிட்டிஷ் மக்களுக்கு அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சஞ்சலமான சாத்தியப்பாட்டையே தெரேசா மே எதிர்நோக்கியிருக்குகிறார். பெரிய பொருளாதார நாடுகள் அத்தகைய சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை (பிரெக்சிட்டுக்குப் பின்னரான) பிரிட்டனுடன் செய்துகொள்வதில் பெருமளவுக்கு ஆர்வத்தை இதுவரை காண்பித்ததாக இல்லை. 

         

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறவேண்டும் என்று விரும்பியவர்களினால் முக்கியத்துவம்கொடுத்து வலியுறுத்தப்பட்ட வெளிநாட்டவர் குடிவரவு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணக்கூடிய நிலைக்கு பிரெக்சிட் வழிகாட்டப்போவதில்லை என்பதும் இப்போது படிப்படியாகத் தெளிவாகத் தொடங்கியிருக்கிறது.

ஐந்து நாள் விவாதத்துக்குப் பிறகு ஜனப்பிரதிநிதிகள் சபையில் டிசம்பர் 11 பிரெக்சிட் வரைவு உடன்படிக்கை மீது வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது. 'முழுமையாக வெற்றி அல்லது எதுவுமில்லை ' என்ற விரக்தியின் விழிம்பிலான ஒரு நிலைப்பாட்டை பிரதமர் எடுத்திருக்கிறார் போலத் தெரிகிறது. தன்னிடம் இதுவிடயத்தில் இரண்டாவது திட்டம் ( ' பிளான் பி ' )எதுவுமில்லை எனறு அவர் கூறுகிறார். இது எந்தவொரு அரசியல்வாதியைப் பொறுத்தவரையில்  அதுவும் குறிப்பாக,  தெரேசா மேயைப் போன்ற அனுபவமுதிர்ச்சிகொண்ட அரசியல் தலைவருக்கு விவேகமான ஒரு நகர்வாக இருக்காது. பலரும் நம்புவதைப் போான்று பிரெக்சிட் வரைவு உடன்படிக்கையை வாக்கெடுப்பில் எம்.பி.க்கள் தோற்கடிப்பார்களேயானால், அது அவரின் அரசியல் வாழ்வுக்கு முடிவைக்கொண்டுவரக்கூடிய பாரதூரமான அரசியல்  மற்றும் பொருளாதார நெருக்கடியை ஐக்கிய இராச்சியத்தில் தோற்றுவிக்கும் அபாயம் இருக்கிறது.

             

பிரெக்சிட்டுக்கு ஐக்கிய இராச்சியத்தின் மக்களின் அபிப்பிராயத்தை அறிய சர்வஜன வாக்கெடுப்பை இரண்டரை வருடங்களுக்கு முன்னர்  நடத்திய கன்சர்வேட்டிவ் பிரதமர் டேவிட் கமரூன் பதவி துறக்கவேண்டி வந்ததைப்போன்று பிரெக்சிட்டை நடைமுறைப்படுத்தும் முயற்சியின் விளைவாக இப்போது அதே கன்சர்வேட்டிவ் கட்சியின் இன்னொரு பிரதமரும் பதவி துறக்கவேண்டிய நிலை வருமா?

 ( வீரகேசரி இணையத்தள வெளியுலக அரசியல் ஆய்வுக்களம்)