இளம் இளைஞர்களை கௌரவிக்கும் தேசிய விருது வழங்கும் விழாவிற்கு நேற்று  பிரதம விருந்தினர்களாக சென்றிருந்த அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்கவும், உதய கம்மன்பிலவும் விருது பெறும் இளைஞர்களாலேயே விருது மேடையில் வைத்து அவமரியாதைக்குட்படுத்தப்பட்ட வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

வெற்றியாளர்களான சுரேன் சமிகார மற்றும் கசுன் சத்துரங்க ஆகியோரே அரசாங்க எம்.பி.க்களான துமிந்த மற்றும் கம்பன்பில ஆகியோருக்கு கைலாகு கொடுப்பதை தவிர்த்ததோடு அவர்களிடம் இருந்து விருதை பெறவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள குறித்த வீடியோ காட்சியில் விருதை பெற வரும் இளைஞர் உதய கம்மன்பிலவிடம் விருதை வாங்க மறுத்து அருகிலிருந்த சகோதர மொழி சினிமாக் கலைஞரான ஸ்ரீயந்த மென்டிஸிடம் விருதை வாங்கிக் கொள்கிறார்.

விருதைப் பெற வந்த மற்றுமொரு இளம் கலைஞர் மேடையிலிருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு கை கொடுத்து விட்டு துமிந்த திஸாநாயக்கவிற்கு மாத்திரம் கை கொடுக்காது உதய கம்மன்பிலவிடம் விருதை பெற்றுச் செல்கிறார்.

இவ்வீடியோ காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாராளமன்ற உறுப்பினர்கள் சிலரும் குறித்த வீடியோ காட்சியை தங்களது முகப்புத்தகத்தில் பகிர்ந்து வருகின்றனர்.