- பேராசிரியர் ஜெயதேவ  உயன்கொட

இப்போதெல்லாம் நாட்டுப் பிரஜைகளில் பலரைப் போன்று எனது மனைவியும் எமது அரசியலமைப்பையும் அதற்கான 19 ஆவது திருத்தத்தையும் அறிந்து விளங்கிக்கொள்வதில் மிகுந்த ஆர்வமுடையவராக மாறியிருக்கிறார். 

அரசியலமைப்பின் பிரதியொன்றை அவர் என்னிடமிருந்து வாங்கிப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். அன்றொரு நாள் ஆபிரஹாம் லிங்கனின் மேற்கோள் வாசகம் ஒன்றைத்தாங்கிய சமூக வலைத்தளப் பதிவொன்றையும் எனக்கு அவர் அனுப்பியிருந்தார். " காங்கிரஸினதும் நீதிமன்றங்களினதும் உரிமைப்படியான எசமானர்களான மக்களாகிய நாம் அரசியலமைப்பை அல்ல, அதைச் சீர்குலைக்கக்கூடிய பேர்வழிகளைத் தூக்கியெறிவோம் " என்று அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

அதேவேளை, தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் கிரமமாகத் தொடர்பைப்பேணிவரும் நண்பர் ஒருவர் என்னிடம் " அரசியலமைப்பை ஜனாதிபதி சிறிசேன கையாளுகின்ற முறை காரணமாக சிறுபான்மையினக் கட்சிகள் மிகவும் கவலையடைந்திருக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியை அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளாக இருந்தாலென்ன அல்லது வேறு எந்தவொரு கட்சியையும் சார்ந்த அரசியல்வாதிகளாக இருந்தாலென்ன அவர்களையும் அவர்களது வாக்குறுதிகளையும் சிறுபான்மையினத்தவர்கள் முற்றாக நம்புவதில்லை. அவர்கள் அரசியலமைப்பை மாத்திரமே நம்பமுடியும்.

அரசியலமைப்பே அவர்களுக்கு நாட்டின் மீஉயர் சட்டம். அதன் காரணத்தினால்தான் அரசியலமைப்பு மீறப்படக்கூடாது என்று அவர்கள் உணருகிறார்கள் " என்று சொன்னார். நான் இணங்கிக்கொண்டேன். " அதிகாரத்தில் இருப்பவர்களினால் அரசியலமைப்பு இவ்வாறு அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்யபபடும்போது, ஒழுங்கற்ற முறையில் வியாக்கியானப்படுத்தப்படும்போது எந்த அரச நிறுவனத்தை அவர்கள் நம்பமுடியும்? " எனறு கேட்ட நண்பனுக்கு " எப்படியோ... உச்சநீதிமன்றம் சகல பிரஜைகளுக்குமான ஜனநாயகத்தின் இறுதி அரணாக இருக்கிறது. அது குறிபிசகுமேயானால், நாம் எலலோரும் சிறுபான்மையினத்தவர்களும்  பெரும்பான்மையினத்தவர்களும் தோல்வியடைவோம்" என்று நான் பதிலளித்தேன்.

 மூன்றாவது தரப்பாக நாட்டுப் பிரஜைகள்

இலங்கையின் அரசியல் நெருக்கடி இப்போது நீதிமன்றங்களின் உச்சநீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்பாக மத்தியஸ்தத்துக்காக  வந்திருக்கிறது.தற்போது தொடர்ந்துகொண்டிருக்கின்ற அதிகாரப்போட்டியில் சம்பந்தப்பட்டிருக்கும் சகல தரப்பினரும் நீதித்துறை தங்களுக்கு சார்பாகவே நீதித்துறை தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருந்தும் கூட இந்த வழக்குகளுக்கு சந்தடிசெய்யாமல் அமைதியாக இருக்கின்ற மூன்றாவது தரப்பொன்று இருக்கிறது. அந்த தரப்பின் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை. அரசியலமைப்பின் உறுப்புரை  3 & 4 பிரகாரம் நிறைவேற்று அதிகாரத்தினதும் பாராளுமன்றத்தினதும் நீதித்துறையினதும் ' ' உரிமைப்படியான எசமானர்களான ' பிரஜைகளே அவர்களாவர்.இந்த வழக்குகளில் தங்கள் கட்சிக்காரர்களுக்காக ஆஜராகின்ற சட்டத்தரணிகள்  மிகுந்த ஆர்வத்துடன் மூன்றாம் தரப்பினரினரின் பெயரைக் குறிப்பிடுவார்கள்.பிரஜைகள்  தங்களது உரிமைகளுக்கான சட்டவாதிகளாக செயற்படக்கூடியவர்கள் என்று நீதிபதிகளை மாத்திரமே எதிர்பார்க்கமுடியும். தங்களது உரிமைகள், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் வரவிருக்கும் சந்ததிகளின்   எதிர்கால  ஜனநாயக வாழ்வு ஆகியவற்றின் பாதுகாவலராக பிரஜைகளுக்கு நீதிபதிகளே இருக்கிறார்கள்.

இலங்கை நீதித்துறைக்கான இந்த ஒப்பற்ற பாத்திரம் ( பிரஜைகளினால் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று) தற்போதைய அரசியலமைப்புச் சர்ச்சைக்கு அரசியல் பின்புலமொன்றையும் வழங்கியிருக்கின்ற விசேடமான சூழ்நிலையின் கீழ் நடைமுறைக்கு வந்திருக்கிறது. நிறைவேற்று அதிகாரத் தலைமைத்துவம் அரசியலமைப்பின்  பொதுப்படையான பிரிவுகளின் வாயிலாக தனக்குத் தரப்பட்டிருக்கின்ற அதிகாரத்தை ( அந்த அதிகாரத்தை  எத்தகைய நிலைவரத்தின் கீழ், எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று குறித்துரைக்கும் பிரத்தியேகமான வேறு பிரிவுகளை அலட்சியம் செய்துகொண்டு) பிரயோகித்து பிரதமரை திடீரென்று பதவி நீக்கம் செய்து அவரின் இடத்துக்கு வேறு  ஒருவரை நியமித்ததுடன் ஒருவாரம் கழித்து பாராளுமன்றத்தையும் கலைத்ததையடுத்து பாரிய அரசியலமைப்புக் குழப்பநிலை தோன்றியிருக்கிறது.

குழப்பநிலையில் இருந்து பேரழிவை நோக்கி

ஜனாதிபதியின் மூன்று நடவடிக்கைகளை சில முன்னணி சட்டத்தரணிகளும் முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவரும் விளக்கிக்கூறி நியாயப்படுத்தியபோது இந்த குழப்பநிலை விரைவாகவே பேரழிவைத்தரக்கூடிய நிலைவரத்தை நோக்கி நகர்ந்தது.அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் இருக்கின்ற சில சட்ட ஓட்டைகள் ஒருதலைப்பட்சமாக ஜனாதிபதி எடுத்த அத்தகைய நடவடிக்கைகளுக்கான சட்டநுணுக்கம் சார்ந்த பின்புலத்துக்கு கதவைத் திறந்துவிட்டது என்று அவர்கள் வாதிட்டார்கள்.

அரசியலமைப்பை ' நாட்டின் மீயுயர் சட்டமாக' நோக்கவேண்டும் என்றும் அதை ஆட்சியாளருக்கும் ஆளப்படுபவருக்கும் இடையிலான ' புனித சாசனத்தை ' உருவகப்படுத்தும் ஆவணமாகப் போற்றவேண்டும் என்றும் முன்னாள்  சட்டத்துறைப் பேராசிரியர்களைப் போன்ற சட்டமேதைகளிடமிருந்து முன்னர் அறிவுரைகளைக்கேட்ட பிரஜைகளுக்கு அரசியலமைப்பு தொடர்பாக இப்போது கடைப்பிடிக்கப்படுகின்ற அணுகுமுறை பெரும் குழப்பத்தைத் தந்திருக்கிறது. அரசியலமைப்பு அதன் மொழிப் பிரயோக அல்லது சட்டநுணுக்கம் சார்ந்த ஓட்டைகளின் அடிப்படையில் விளங்கிக்கொள்ளப்படவேண்டுமா அல்லது அதன் உருவாக்க அடித்தளங்களினதும் மையக் கோட்பாட்டு கற்பிதங்களின் அடிப்படையில் விளங்கிக்கொள்ளப்படவேண்டுமா?

சட்டநுணுக்கம் சார்ந்த ஓட்டைகள் என்று சொல்லப்படுகின்றவற்றின் அடிப்படையில் அரசியலமைப்பு வியாக்கியானப்படுவதானால், அந்த அரசியலமைப்பில் என்ன மீயுயர் தன்மை அல்லது புனிதத்தன்மை இருக்கிறது? எதிர்வரும் நாட்களில் நீதிபதிகள் சிந்தனைக்கு எடுத்து முக்கியமாகத் தீர்மானிக்கவேண்டிய ஒன்றாக இந்தப் பிரச்சினை இருக்கிறது.

மைய விழுமியங்கள்

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் உருவாக்க அடிப்படைகளையும் மைய விழுமியங்களையும் விரித்துரைப்பதுவும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள ஒரு பணியாகிறது.தற்போதைய சர்ச்சையில் சம்பந்தப்பட்ட வெவ்வேறு தரப்புகளினால் முரண்பாடான அணுகுமுறைகளில் அரசியலமைப்பு நோக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இந்தப் பணி பெரும் முக்கியத்துவமுடையதாகத் தெரிகிறது.ஜனநாயக அரசியலமைப்பொன்றின் மைய விழுமியங்கள் அரசின் ஒவ்வொரு அங்கத்தையும் அரசியல் அதிகாரத்தை வைத்திருக்கின்ற தனிநபர்களையும் மாத்திரமல்ல, அரசியலமைப்பு வாயிலாக ஆணையளிக்கப்பட்ட அதிகாரத்தைச் செயற்படுத்தும் முறையையும் அதன் செயற்பரப்பின் எல்லைகளையும் கூட வரையயை செய்கிறது.அயல் நாடான இந்தியாவில் உள்ளதைப் போலன்றி எமது நாட்டில் அரசியலமைப்புப் விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறையில் ஒரு புத்திஜீவித்துவ பாரம்பரியம் இல்லாதிருப்பது பணியை மேலும் கூடுதலான அளவுக்கு சிக்கலானதாக்குகிறது.

இது ஒரு வகையில் உச்சநீதிமன்றத்துக்கு வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது எனலாம். அதாவது தற்போதைய அரசியலமைப்பு வழக்குகளை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு முறைமையின் அடிப்படைத் தத்துவங்களையும் அரசியல் அதிகாரத்தை வைத்திருப்பவர்கள் அதைச் செயற்படுத்துவதில் கடைப்பிடிக்கவேண்டிய விதிகளையும் எல்லைகளையும் நெறிப்படுத்துகின்ற அரசியலமைப்பு நெறிமுறையையும் வலியுறுத்தமுடியும்.

இரு அணுகுமுறைகள்

பிரச்சினைக்குரியதாக இருக்கின்ற அரசியலமைப்பு வியாக்கியானத்தில் இரு பிரதான அணுகுமுறைகள் இருக்கின்றன.முதலாவது, நிறைவேற்று அதிகார தலைமைத்துவத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் அணுகுமுறை. 19 வது திருத்தத்தின் உறுப்புரைகளை  மூலஆவணமான  1978 அரசியலமைப்பிலும் பிறகு கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தத்திலும் செய்யப்பட்ட ஒரு சிறிய ஒட்டுவேலையாக வியாக்கியானம் செய்யும் இந்த அணுகுமுறை 1978 அரசியலமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் 18 ஆவது திருத்தத்தினால் மேலும் வலுப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் அடிப்படைக் கட்டமைப்பை 19 வது திருத்தம்  மாற்றமின்றித் தொடர்ந்து பேணுகின்றது என்றும் அதனால் அக்டோபர் பிற்பகுதியிலும் நவம்பர் முற்பகுதியிலும் ஜனாதிபதி சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட மூன்னு நடவடிக்கைகள் அவருக்கு உரித்தான அதிகாரங்களின் எல்லைகளுக்குள்ளேயே வருகின்றன என்றும் வாதங்களை முன்வைக்கிறது.   

உண்மையில் இந்த அணுகுமுறை 18 வது திருத்தத்தை பின்கதவின் ஊடாக மீளவும் கொண்டுவந்து திரும்பவும் செல்லுபடியானதாககுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அதுவே 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 19 வது திருத்தத்தினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை கடுமையாக எதிர்த்தவர்களின் நோக்கமாகவும் இருக்கிறது.  

இரண்டாவது அணுகுமுறை  ( அ) 1978 அரசியலமைப்பினாலும் 18 வது திருத்தத்தினாலும் வரையறுக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை 19 வது திருத்தம்  கணிசமானளவுக்கு குறைத்திருக்கிறது என்றும் ( ஆ) நிறைவேற்று அதிகார தலைமைத்துவத்தின் தன்னிச்சையானதும் அடாத்தானதுமான கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டதான அமைச்சரவையையும் பாராளுமன்றத்தையும் உருவாக்கியிருக்கிறது என்றும் நோக்குகிறது.   

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 19 வது திருத்தம் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வரும்வரை அவரது பதவிக்கான ஒரு  மட்டுப்படுத்தப்பட்ட  நிலைமாறுகால அதிகாரங்களை தொடர்ந்து பேணுகின்ற அதேவேளை, ஜனாதிபதிக்கும் பிரதமர் அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்துக்கும் இடையில்  நிறுவனரீதியான புதியதொரு அதிகார சமநிலையை உருாக்கியிருக்கிறது.இதற்காக அது மதிக்கப்படுகிறது. இந்த புதிய நிறுவன அதிகாரச் சமநிலையில் பிரதமரை நியமிப்பதில், பதவியில் இருந்து பிரதமரை நீக்குவதில், பாராளுமன்றத்தைக் கலைப்பதில் ஜனாதிபதியின் நடவடிக்கை தற்துணிபானதோ அல்லது வரம்பற்ற அளவுக்கு முழுமையானதோ அல்ல, மாறாக அரசியலமைப்பினால் வகுக்கப்பட்டிருக்கும் மட்டுப்பாடுகளுக்கு ஆட்பட்டதாகும்.      

முழுமையான வட்டம்

தற்தோதைய அரசியலமைப்புச் சர்ச்சை தொடர்பிலான இந்த முரண்பாடான இரு அணுகுமுறைகளுக்கு நீதிமன்றம் எவ்வாறு அதன் பதிலிறுப்பை வெளிப்படுத்தப்போகின்றது என்பதை பிரஜைகளாகிய நாம் அறியோம். ஆனால், இறையாண்மையைக் கொண்டிருப்பவர்கள் என்ற வகையில் பிரஜைகள் நாட்டின் தற்போதைய ஜனநாயகமயமாக்கல் செயன்முறைகளின் நலன்களை மேம்படுத்துவதாக நீதிமன்றத்தின் தீர்ப்பு அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கான சகல உரிமைகளையும் கொண்டிருக்கிறோம்.1978 அரசியலமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒன்றில் முற்றுமுழுதாக ஒழிக்கப்படவேண்டும் அல்லது கணிசமானளவுக்கு சீர்திருத்தம் செய்யப்படவேண்டும் என்ற பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் வாதத்துடனேயே மேற்கூறப்பட்ட ஜனநாயகமயமாக்கல் செயன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டன என்பது முக்கியமாகக் கவனத்தில் எடுக்கப்படவேண்டியதாகும். 

 அதேவேளை, 18 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டமை ஜனநாயகமயமாக்கலின் அடிப்படையில் எழுந்த மக்கள் கோரிக்கையின் விளைவானஒரு செயற்பாடு அல்ல.மாறாக, அது  அந்த நேரத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒரு அரசியல் தலைவரின் மனவிருப்பத்தின் நிறைவேற்றமேயாகும்.அது இலங்கையின் ஜனநாயகத்தை, பிரஜைகளின் சுதந்திரங்களை, உரிமைகளை,  நீதித்துறை உட்பட ஜனநாயக நிறுவனங்களை சேதப்படுத்தியது.அந்தச் சேதத்தில் இருந்து மீள்வதற்கு பிரஜகள் இன்னமும் போராடிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இப்போது இலங்கையின் ஜனநாயகமயமாக்கலுக்கான இடரநிலை ஒரு முழுமையான வட்டத்தைச் சுற்றிவந்து நிற்கிறது.வெறுப்பூட்டுகிற 18 வது திருத்தம் பின்கதவின் வழியாக மீண்டும் கொண்டுவரப்படுவதையும் ஜனநாயகப் போராட்டத்தின் பயன்கள், அதிகாரத்தில் இருக்கும் இன்னொரு தனிநபரின் விருப்பு வெறுப்புகளின் காரணமாக மீண்டும் ஒரு தடவை மறுதலையாக்கப்படுவதையும் நாடு காணவேண்டுமா? 

தங்களது ஜனநாயக வாழ்வின் விதி இடரமிக்கதொரு முட்டுச்சந்தில் நிற்கின்ற இந்த நேரத்தில் தங்களது நீதிபதிகள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் பிரார்த்திக்கவும் இலங்கைப் பிரஜைகளுக்கு உரிமை இருக்கிறது.