பத்தேகம பகுதியில் சிற்றுண்டிச் சாலை ஒன்றிற்குள் பிரவேசித்து அங்கு வேலை பார்க்கும் இரு வேலையாட்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷான்த முதுஹெட்டிகமகேவின் சாரதி உள்ளிட்ட மற்றொரு நபரையும் எதிர் வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்தேகம – கனேகம பிரதேசத்தைச் சேர்ந்த பேருகந்தகே சமின் கல்யாணப்ரிய மற்றும் விஜய ஏக்கநாயக்க ஆகிய இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினரின் சாரதி கடந்த 17ஆம் திகதி குறித்த சிற்றுண்டிச் சாலைக்கு சென்று கொத்து ரொட்டி தருமாறு கேட்டுள்ளார்.

கொத்து ரொட்டியை தயாரித்து வழங்க தாமதமானதால் சிற்றுண்டிச் சாலையின் காசாளரை தாக்கி விட்டு “நான் யார் என்று தெரியமா? நான் நிஷாந்தகேயின் சாரதி” என கூறிவிட்டு வெளியேறி சென்றுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் வந்து கையிலிருந்த உணவுப் பொதியை காசாளரின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளார்.

இதைக் கண்டு தடுக்க வந்த சிற்றுண்டிச் சாலையின் மற்றைய ஊழியர் தடுக்க வந்த போது அவரையும் தாக்கியுள்ளார்;.

தாமதமாகிய காரணத்தினால் கொத்து ரொட்டியை இலவசமாக தருமாறு சாரதி கேட்டுள்ளார். ஊழியர்கள் கொடுக்க மறுக்க அதிகாரத் தொணியில் மிரட்டி விட்டு பணத்தை தூக்கி எரிந்து விட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் சந்தேக நபரான சாரதி மற்றுமொரு நபருடன் வந்து ஊழியரை முட்டுக்காலில் இருக்கச் செய்து தலைக்கவசத்தில் தாக்கி அவர் அணிந்திருந்த ஆடைகளை கிழித்தெரிந்து விட்டு சென்றுள்ளனர்.

மீண்டும் மறு நாள் காலையில் வந்த சாரதி மற்றும் அவரது தோழரும் சிற்றுண்டிச் சாலையின் முன்னால் நின்று கொண்டு மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

தங்களுக்கு ஏற்பட்ட அசாதாரண சம்பவம் குறித்து ஊழியர்கள் சிற்றுண்டிச் சாலை உரிமையாளரிடம் தெரிவித்ததையடுத்து உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்து நீதி மன்றில் ஆஜர் படுத்திய போதே பத்தேகம நீதிமன்ற நீதவான் எதிர் வரும் 11ஆம் திகதி வரையில் சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு அடையாள அணிவகுப்பிற்கு ஏற்பாடு செய்யமாறும் உத்தரவிட்டுள்ளார்.