வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் மாலை 06.05 மணிக்கு சுடரேற்றல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.இன்றைய நிகழ்வு குறித்து மேலும் தெரிவிக்கும்போது,இன்றைய தினம் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் நகரசபை மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியாவில் பிரதான நிகழ்வாக இந்நிழ்வு இடம்பெறவுள்ளது. ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ள நிலையில் வவுனியா நீதிமன்றத்தின் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பாடல் ஒலிபரப்புவதற்கு பொலிசார் தடை உத்தரவினை பெற்றுள்ளனர். கடந்த வருடம் ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களையும் மீறி ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலும் அன்றைய தினம் நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறியே மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இவ்வாண்டும் இவ்வாறான தடை உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது. எத்தகைய தடைகள் வந்தாலும் இன்று மாலை மாவீரர் தின நிகழ்வுகள் திட்டமிட்ட வகையில் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.