பாடசாலை மாணவ- மாணவிகளின் நலன் கருதி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் புதிய உத்தரவை அனுப்பி உள்ளது. 

முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடசாலையில் வீட்டுப் பாடம் வழங்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில் தெரிவித்ததாவது:-

முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடசாலைகள் வீட்டுப் பாடம் வழங்கக் கூடாது. இந்த இரண்டு வகுப்புகளிலும் மொழி பாடம், கணித பாடம் தவிர வேறு எந்த பாடங்களையும் பாடசாலைகளில் கற்பிக்க கூடாது.

முதலாம் வகுப்பு 3ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சுற்றுசூழல் தொடர்பான பாடங்கள், கணிதம் ஆகியவற்றை என்.சி.இ. ஆர்.டி. திட்டத்தின்படியே கற்பிக்க வேண்டும்.

குறித்த வகுப்பு மாணவ- மாணவிகள் பாடசாலைக்கு வரும்போது கூடுதலாக எந்த பாடபுத்தகங்களையோ, வேறு பொருட்களையோ கொண்டு வரும்படி அறிவுறுத்தக்கூடாது. முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகபை ஒன்றரை கிலோ எடையை தாண்டக் கூடாது. 3ஆவது முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் புத்தகபை எடை 2 கிலோ முதல் 3 கிலோ வரைதான் இருக்க வேண்டும்.

6ஆம் வகுப்பு, 7ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை 4 கிலோவுக்கு மேலும், 8ஆம் வகுப்பு, 9ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான புத்தக பை எடை 4.5 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. 10ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை 5 கிலோவுக்கு அதிகம் இருக்க கூடாது. எந்தெந்த வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அந்த மாணவ- மாணவிகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.