இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இலங்கை அணியை 'வைட் வொஷ்' செய்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் ஒருநாள், இருபதுக்கு 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தது.

இதில் மூன்று தொடர்களையும் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 23 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்டி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்னிங்ஸுக்காக 312 ஓட்டங்களை குவித்த வேளை முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இரண்டாம் நாளான நேற்று 92.5 ஓவர்களை எதிர்கொண்டு 336 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை 65.5 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. 

அதன் பின்னர் 96 ஓட்ட முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வர நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது 3 ஓட்டங்களுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர ஆரம்பித்த இங்கிலாந்து அணி 69.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 327 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

327 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவின்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் 17 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்றிருந்தது.

ஆடுகளத்தில் குசல் மெண்டீஸ் 15 ஓட்டத்துடனும், லக்ஷான் சந்தகன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் போட்டியின் நான்காம் நாளான இன்று வெற்றியை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 86.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 42 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டீஸ் 89 ஓட்டங்களையும், ரோஷான் சில்வா 65 ஓட்டங்களையும், மலிந்த புஷ்பகுமார 42 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக மொய்ன் அலி, ஜெக் லெச் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களையும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3:0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை 'வைட் வொஷ்' செய்துள்ளது.