வட மாகாணம் முழுவதும் மாவீரர் தினத்தையொட்டி மாவீரர்களுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும் பல்வேறு உதவி திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள், சுய தொழில் உபகரணங்கள் பொது அமைப்புக்களாலும் புலம் பெயர் உறவுகளாலும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நாச்சிக்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 2007 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராட்ட களத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதற்கான படகு மற்றும் இயந்திரம் ஒன்றும் நேற்று சனிக்கிழமை மாலை  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் பின்னர் கால்கள் இரண்டையும் இழந்த பின்னர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக வேறு ஒரு நபருடன் கூலி தொழிலாளியாக கடற்தொழிலில் ஈடுபட்டு வந்ததை அடுத்து கனடா வாழ் 'காலையடி உதவும் கரங்கள்' அமைப்பின் ஊடக குறித்த போராளிக்கு மீன் பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முன்னாள் மாகாண  சபை உறுப்பினர் சட்டத்தரணி பா. டெனிஸ்வரன் முன்னாள் போராளிக்கான உபகரணங்களை நேரில் சென்று  வழங்கி வைத்தார்.

உதவியினை பெற்று கொண்ட முன்னாள் போராளியின் மனைவியும் இறுதி யுத்தத்தின் போது காயப்பட்டு தற்போதுவரை கால் ஒன்றில் பாதிப்போடு வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.