மஹிந்தவை தோற்கடித்த எமக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிப்பது கடினமாக காரியமல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, ஆளும் தரப்பினர் என்று தம்மை தாமே குறிப்பிட்டுக் கொள்பவர்களே இன்று பாராளுமன்றில் தலைகுனிந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இவர்களின் செயற்பாடு அரசியல் வரலாற்றில் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியவுடன் ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுப்படும் என்றே ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன எண்ணினார். ஐக்கிய தேசிய முன்னணி பிளவுப்பட்டு ஒருபகுதியினர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைவர் என்றே கனவுக்கொண்டார். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி முன்னர் இருந்ததை விட பலமடங்கு இன்று பலமடைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியினர் நேற்று கண்டியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.