இரக்கத்தின் யுபிலி ஆண்டிலே நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இறைவனின் எல்லையற்ற இரக்கம் இயேசுவில் வெளிப் பட்டதை நாம் அறிவோம். இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய பாஸ்கா மறைநிகழ்ச்சிகள் இறைவனுடைய இரக்கத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. எனவே புனித வாரத்தின் மிகமுக்கிய நாட்களுக்குள் காலடி பதிக்கும் நாம், இறைவனின் இரக்கம் இயேசு வழியாக எப்படி வெளிப்பட்டது என்பதை இந்நாட்களில் சிறப்பாகச் சிந்திப்போம்.
புனித வியாழன் தினமாகிய இன்றைய நாள் இயேசுவின் வாழ்விலும் அவருடைய சீடர்களாகிய கிறிஸ்தவர்களின் வாழ்விலும் முக்கியமான நாள். இன்றுதான் உலகம் உள்ளளவும் தமது ஒப்பற்ற உடனிருப்பை உணர்த்தும் நற்கருணை என்னும் அருளடையாளத்தை இயேசு நிறுவினார். அந்த நற்கருணையைப் பொருளுணர்ந்து கொண்டாடவும், தந்தை இறைவனுக்கும் இத்தரணிவாழ் மக்களுக்கும் உறவுப்பாலமாக விளங்கவும் குருத்துவம் என்னும் அரிய அருள் அடையாளத்தை ஏற்படுத்தியதும் இந்த நாளில்தான். தாழ்ச்சியின் மாட்சியை இந்தத் தரணிக்கு உணர்த்தும் விதத்தில் தம் திருத்தூதர்களின் காலடிகளைக் கழுவி, அன்புக் கட்டளையைக் கொடுத்ததும் இந்த நாளே. இயேசுவினுடைய இந்தச் சீரிய செயற்பாடுகளின் ஆழமான அர்த்தத்தை புரிந்துகொள்ள முயல்வோம்.
உயிருள்ள நீங்காத நினைவுச் சின்னம்
தாஜ்மஹால் என்பது ஏழு உலக அதிசயங்களில் ஒன்று. உலகத்தின் பல்வேறு மக்களையும் கவர்ந்து ஈர்க்கும் அழகிய கட்டிடம் இது. ஏழு உலக அதிசயங்களிலேயே முதன்மையான, முக்கியமான அதிசயமாக இன்று இந்த தாஜ்மஹால் கருதப்படுகின்றது. இந்தத் தாஜ்மஹாலினுடைய வரலாறு மிகவும் சுவாரஷ்யமானது.
இற்றைக்கு 350 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவை ஆண்ட மொகலாய சக்கரவர்த்தியான சாஜகான் என்ற அரசன் இதைக்கட்டினான். எதற்காக இந்த மாபெரும் அழகிய கட்டிடத்தைக் கட்டினான்? குழந்தைப்பேற்றின்போது இறந்த தன் ஆருயிர் மனைவியான மும்தாஜ் மஹாலின் நினைவாக இந்தத் தாஜ்மஹாலைக் கட்டினான். இது சாஜகான் என்ற அந்த அரசன் தன் மனைவியான மும்தாஜ்மேல் கொண்ட அன்பின் அடையாளச் சின்னம். இது காலத்தால் அழியாத காதல் சின்னம்.
இயேசுவும் தமது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் தாம் தந்தையிடம் செல்லவேண்டிய நேரம் வந்தபொழுது ஒரு நீங்காத நினைவுச் சின்னத்தை, தனது உயிருள்ள பிரசன்னத்தை விட்டுச்செல்ல விரும்பினார். அதுதான் நற்கருணை!
பூச்சியத்திற்குள்ளே ஒரு இராச்சியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன் என்று பாடுகிறான் ஒரு கவிஞன். ஆம் உலகமே கொள்ளமுடியாத இறைவன், ஒரு சிறு அப்பத்திற்குள் தன்னை சுருக்கிக்கொள்கிறார், தன்னை குறுக்கிக்கொள்கிறார். இது எப்படிப்பட்ட விந்தையான விடயம்?
நற்கருணை - புரியாத புதிரா?
இயேசு தான் வாழ்ந்த காலத்தில் நற்கருணையைப்பற்றி பேசுகின்றார். யோவான் நற்செய்தி இதைப்பற்றி நமக்குச் சொல்கிறது விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வுதரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன்.
அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன் (யோ 6: 51) என்று இயேசு கூறியபோது இதை அன்றைய மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும் என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது (6: 52).
குருத்துவத்தை ஏற்படுத்திய நாள்
இந்த நற்கருணையைப் பொருளுணர்ந்து கொண்டாடவும், தந்தை இறைவனுக்கும் இத்தரணிவாழ் மக்களுக்கும் உறவுப்பாலமாக விளங்கவும் குருத்துவம் என்னும் அரிய அருள் அடையாளத்தை ஏற்படுத்தியதும் இந்த நாளில்தான். இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்று சொல்லி இறைபணியாளர்களை குருக்களை இயேசு ஏற்படுத்துகின்றார். குருத்துவத்தை ஏற்படுத்திய இந்நாளிலே இயேசுவின் பொதுக்குருத்துவத்தின் பங்காளிகளாகவிருக்கும் நாமனைவரும் தாழ்ச்சியுடன் பணிபுரிந்து வாழ எம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
இறையரசின் பணியாளர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் நற்செய்திப் பணியாற்றும் அனைத்து கிறிஸ்தவப் பணியாளர்களுக்காவும் சிறப்பாக இறைவேண்டல் செய்கின்ற நாளாக இந்நாள் அமைகின்றது. தமது வார்த்தையாலும், வாழ்வாலும் கிறிஸ்துவுக்குச் சாட்சிபகர இவர்களுக்கு இன்னும் இன்னும் இறையருள் கிடைக்க வேண்டுமென செபிக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
நமக்குத் தரப்பட்ட
வாழ்க்கைப் பாடம்
தங்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் அவர்களுக்குள் ஏற்படுவதை இயேசு காண்கிறார். தாழ்ச்சி பற்றி இயேசு சொல்லிப் பார்த்தார். அவருடைய சீடர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. எனவே செயல் மூலம் விளக்கம் கொடுக்கின்றார்.
பாதம் கழுவும் நிகழ்ச்சி என்பது வெறும் சடங்கு அல்ல, அது வாழ்க்கை! அதிகாரமும், அகங்காரமும், நான் என்ற தன்முனைப்பும் நிறைந்த இன்றைய உலகில் நாம் தாழ்ச்சியின், பணிவின் மாதிரிகளாகத் திகழ வேண்டும். இதைத்தான் இயேசு இன்று நமக்கு வாழ்க்கைப்பாடமாக செய்முறைப் பயிற்சியாக செய்து காட்டுகின்றார்.
எனவே இன்றைய புனித நாள் நமக்குத் தரும் நலமான, நயமான சிந்தனைகளை உள்வாங்கி அர்த்தமுள்ள வகையில் நம் வாழ்வைக் கட்டியெழுப்புவோம்.
அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM