(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மைத்திரி -மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சியினால் அடுத்த ஆண்டு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அரசியல் நெருக்கடி பிரச்சினைகளுக்கு  தீர்வு காணப்பட் வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். 

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எம்மிடம் தயாராகவே உள்ளது. டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் இடைக்கால வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஜே.வி.பி.யின் உறுப்பினர் விஜித ஹேரத் எம்.பியினால்  பாராளுமன்ற நெருக்கடி நிலைமை தொடர்பாக கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்  இதனை தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் நாங்கள் ஒருபோதும் சந்திக்காத நெருக்கடி நிலைமைக்குள் தள்ளப்படுவோம். டிசம்பர் 31 வரை தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் அதன் பின்னர் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றால் சட்ட பூர்வமான வரவு செலவு திட்டமோ அல்லது இடைக்கால கணக்கு அறிக்கையோ கொண்டு வரப்பட வேண்டும். இடைக்கால கணக்கு அறிக்கையை அமைச்சரவையில் நிறைவேற்றியுள்ளதாக கூறுகின்றனர். 

ஆனால் திருட்டு அமைச்சரவையில் அதனை நிறைவேற்றியுள்ளதாக அவர்கள் கூறினாலும் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்ற முடியாது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஜனவரி 1ஆம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. ஓய்வூதியதாரர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாது. உர மானியங்களை கொடுக்க முடியாது. பிள்ளைகளுக்கான சீருடைகளை கொடுக்க முடியாது போகும். இவ்வாறாக பாரிய நெருக்கடி நிலைமைக்கு நாடு தள்ளப்படும்.