(ஆர்.யசி, எம்.ஆர்.எம். வசீம்)

இலஞ்சம் கொடுப்பதன் மூலமும், வன்முறைகள் மூலமும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது.  ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வன்முறையான முறையில் நடந்துகொண்டனர். இதனால் நாட்டுக்கும், சட்டவாக்க சபைக்கும் வெட்கம் ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை இழந்த ஒருவர் நாட்டின் பிரதமராகவோ அல்லது அமைச்சரவையின் தலைவராகவோ  ஒருபோதும் இருக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியல் அமைப்பினை மீறி எவரும் செயற்பட இடமளிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

கடந்த மாதம் 26 ஆம் திகதிக்கு பின்னர்  இந்த பாராளுமன்றத்தில் என்ன நடந்தது, சபாநாயகர் நாற்காலி பறிக்கப்பட்டு சிலர் தாக்கப்பட்டு, மிளகாய்த்தூள் வீசப்பட்டு ஜனநாயகத்திற்கு முரணான வகையில் சிலர் நடந்துகொண்டனர். 

அரசியல் அமைப்பினை அனைவரும் மதிக்க வேண்டும், அதனை  மீறும் வகையில் எவரும் நடந்துகொள்ளக்கூடாது. இப்போது பிரதமர் ஒன்றுவரும் அரசாங்கம் ஒன்றும் இல்லை என ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது  என்பதே எமது  நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.