பெண்களுக்கான இருபதுக்கு - 20 சர்வதேச உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. 

10 அணிகள் பங்குபற்றிய 6 ஆவது பெண்களுக்கான இருபதுக்கு- 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் கடந்த 09 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளில் ஆரம்பமானது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதின.

கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 143 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 17.3 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 71 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 71 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இந் நிலையில் இன்று நடைபெற்று முடிந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது. 113 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17.1 ஓவர் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது.

இதன் மூலம் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திலிய அணிகள் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தன. 

இவ்விரு அணிகளுக்குமிடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.