நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகியிருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படம் அடுத்த மாதம் 21 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் ‘சீதக்காதி ’, ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அடங்க மறு ’ ஆகிய படங்களுடன் விஷ்ணு விஷால், ரெஜினா கஸாண்ட்ரா, ஓவியா நடிப்பில் தயாரான சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படமும் வெளியாகவிருக்கிறது.

இவர்களுடன் யோகி பாபு, கருணாகரன், ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், சௌந்தர்ராஜா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் செல்லா இயக்கியிருக்கிறார்.

நடிகர் விஷ்ணு தயாரித்திருக்கும் இந்த படத்தில் நடிகை ஓவியா ஒரேயொரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய நட்சத்திரங்களின் படங்களுடன் மோதுவதால் இந்த படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.