நத்தார், புதுவருட பண்டிகைக்கால வியாபாராங்களை மேற்கொள்ள இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் 298 தற்காலிக வியாபார நிலையங்கள்  அமைக்க இடம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

நத்தார், புது வருட பண்டிகைக்கால வியாபாராங்களை மேற்கொள்ள ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை தற்காலிய வியாபார நிலையங்களை அமைக்க மன்னார் நகர சபை அனுமதி வழங்கி வருகின்றது.

இம் முறை மன்னார் நகர சபை பிரிவில் 298 தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து கேள்வி படிவங்கள் வழங்கப்பட்டு கேள்வி கோரல் மூலம்  இட ஒதுக்கீடுகள் வழங்கப்படவுள்ளது.

ஆகக்குறைத்த கேள்வித்தொகையாக 13 ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் பண்டிகைக்கால வியாபாரத்தின் மூலம் சுமார் 11 மில்லியன் ரூபா வருமானம் மன்னார் நகர சபைக்கு கிடைத்தது.

இம்முறை அதிகரித்த வருமானத்தை மன்னார் நகர சபை பெற்றுக்கொள்ளும்.

குறித்த வருமானத்தினூடாக மன்னார் நகர சபை பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும்.

உள்ளூர் வர்த்தகர்களை பாதிக்காத வகையில் இம்முறையும் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.