புதிய அமைச்சரவையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சு பொறுப்பை ஆறுமுகன் தொண்டமான் பொறுப்பேற்றதன் பின் புதிய கிராமங்களில் தனி வீடுகளை அமைப்பதற்கான பிள்ளையார் சுழி செனன் தோட்டத்தில் கே.எம் பிரிவில் போடப்பட்டுள்ளது.இதனடிப்படையில், அட்டன் செனன் தோட்டத்தில் கே.எம் பிரிவில் 45 தனி வீடுகளை கட்டி அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.இதில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத் தலைவர் எஸ்.அருள்சாமி தலைமை தாங்கி அடிக்கல்லை நாட்டி வைத்தார். 

இதன்போது இவ் நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் உள்ளிட்ட அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஷ், அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர்கள், தோட்ட முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.செனன் தோட்டத்தில் கே.எம் பிரிவில் தொடர் குடியிருப்பு லயத்தில் அடிப்படை வசதிகள் அற்ற 45 வீடுகளை அவ்விட்டத்திலிருந்து அகற்றி அவர்களுக்கு புதிய தனி வீடுகளை அமைத்துக்கொடுக்க நான்கு கோடியே 50 இலட்சம் ரூபா செலவில் வீடுகளை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்ற வேளையில் இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.