பலாலி விமான நிலையத்தை மேலதிக காணிகளை சுவீகரிக்காமல் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கு இந்தியாவும், இலங்கையும் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப் பகுதியிலுள்ள மக்கள் மேலதிக காணி சுவீகரிப்புக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையிலேயே விமான நிலையத்தை காணிசுவீகரிப்பின்றி தரமுயர்த்துவதற்கு இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி ஏ. நடராஜனை மேற்கோள்காட்டி  இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்திய விமான நிலைய அதிகார சபைக்யின் ஐந்து உயர்மட்ட அதிகாரிகள் குழு அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பலாலி விமான நிலையத்தின் களநிலைமைகளை ஆராய்ந்த பின்னரே இவ்வாறு இரண்டு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது இவ்வாறிருக்க எதிர்கால நெரிசல்கள் மற்றும் பாரியளவிலான விமானங்களை தரையிரக்கக்கூடிய வசதி என்பவற்றை கருத்திற்க் கொண்டே பொதுவாக விமானநிலையங்கள் அமைக்கப்படுவதுன்டு. ஆனால் காணி அபகரிப்பு தொடர்பான சர்ச்சைகள் இல்லாமல் ஏதாவது விரைவான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் தற்போது காணப்படுகின்ற ஓடுபாதையினை நீடிக்காமல் வசதிகளை மேம்படுத்துவதே ஒரே மார்க்கமாகும் என்று இந்தியாவின் மற்றுமொரு துறைசார்ந்த அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

பலாலி விமானநிலையத்திற்கு அருகிலிருக்கின்ற மக்கள் விமான நிலைய விஸ்தரிப்பின் போது தமது காணிகள் அபகரிக்கப்பட்டு விடுமமா என்ற அச்சத்திலிருக்கின்றனர். மேலும் விமானநிலையத்தில் அபிவிருத்தியானது மேலதிக  காணி அபகரிப்பின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமென வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரனும் அண்மையில் தெரிவித்திருந்தார். 

பலாலி விமானநிலையத்தின் தற்போதைய ஓடுபாதையானது 2.3 கிலோமீற்றர் தூரம் கொண்டதாகும். சாதாரணமாக போயிங் 717 ரக விமானங்களை தரையிறக்கும் வசதி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.