ஜனாதிபதி தொடங்கி வைத்த அரசியல் நெருக்கடியை அவரே முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 

இழுபறி நடவடிக்கைகளை பின்பற்றுதல் கூடாது. மலையகம் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் ஜனாதிபதி வெற்றிபெற பூரண ஆதரவை வழங்கி இருந்தனர். இம்மக்களின் எதிர்பார்ப்புகளை மழுங்கடிக்க முயற்சிக்கக் கூடாது. இம்மக்கள் வழங்கிய ஆதரவை ஜனாதிபதி மறந்து செயற்படக்கூடாது. 

நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு உடனடி தீர்வை ஜனாதிபதியே முன்வைக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்தார்.

நாட்டின் அண்மிய அரசியல்  நிலவரங்கள் தொடர்பில் அண்மையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில்  மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  வழங்கிய ஆதரவை அவர் ஒருபோதும் மறந்து செயற்படக்கூடாது. நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முனைவதுடன் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். 

நாடு இன்று அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. நாட்டின் அரசியல் நெருக்கடி உக்கிரமடைந்துள்ள நிலையில் நாட்டு மக்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கின்றது. 

இந்நிலையில்  எமது நாடு வீழ்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் உள்ளீர்க்கப்படும் அபாயம் உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர். 

ஜனநாயக நெருக்கடி நிலைமைகள் இலங்கையில் நிலைகுலையச் செய்திருக்கின்றது. 

பெயரளவு ஜனநாயகம் இலங்கையில் இடம்பெறுவதாக சர்வதேசம் விமர்சங்களை முன்வைத்து வருகின்றது. 

சர்வதேசத்தை பகைத்து செயற்படும் இலங்கையின் போக்கானது பாதக  விளைவுகள் பலவற்றையும் ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. 

அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் மிக முக்கிய ஆவணமாக விளங்குகின்றது. 

அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து எல்லா செயற்பாடுகளும் இடம்பெறுதல் வேண்டும்.

பாராளுமன்ற சம்பிரதாயங்கள் அண்மைகாலமான இலங்கையில் மீறப்பட்டு வருகின்ற நிலையில் பாராளுமன்ற கலாசாரம் சிதைவடைந்திருக்கின்றது.

 சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை என்பவற்றுக்கிடையில் ஒற்றுமைத்தன்மை இல்லாமலாகியுள்ளது.

தனிமனித அதிகாரமும் ஆளுமையும் விஞ்சி நிற்கின்றது. மூன்றரை வருட காலம் சிறப்பாக  இயங்கிய நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டிருக்கின்றன. 

பெரும்பான்மை தொடர்பாக கவனம் செலுத்தாது புதிய பிரதமர் நியமனம் வழங்கப்பட்டமையே இன்று  பல பிரச்சினைகளுக்கும்  வித்தாக அமைந்திருக்கின்றது. 

 எனவே அரசியல் நெருக்கடிக்கு உடனடி தீர்வு எட்ட ஜனாதிபதி ஆவணஞ் செய்ய வேண்டும்  என்றார்.