(டெல்லியிலிருந்து நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெரோஸ் ஷா கொட்லா விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐ சி சி) உலக இருபது 20 சுப்பர் 10 குழு 1 கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து 15 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சில் தடுமாறிக்கொண்டிருந்த இங்கிலாந்துக்கு மொயீன் அலி கைகொடுத்தார். எனினும் ஆப்கானிஸ்தானின் கடும் சவாலுக்கு மத்தியிலேயே இங்கிலாந்து இந்த வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியுடன் அரை இறுதியில் நுழைவதற்கான வாய்ப்பை இங்கிலாந்து சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம்  பெற்று பெரும் தடுமாற்றத்தில் இருந்தது.

ஆனால் எதிர்த்தாடுவதே சிறந்தது என்பதற்கு அமைய துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடிய மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றதுடன் வீழ்த்தப்படாத 8 ஆவது விக்கட்டில் டேவிட் வில்லியுடன் 33 பந்துகளில் 57 ஒட்டங்களைப் பகிரந்தார். வில்லி ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன் பலனாக இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.

இவர்களைவிட ஜேம்ஸ் வின்ஸ் 22 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தில் ஓரளவு திறமையை வெளிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் மொஹமத் நபி, ராஷத் கான் ஆகிய இருவரும் தலா 17 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் எதையாவது சாதிக்கலாம் என கருதப்பட்ட போதிலும் அவ்வணி ஆரம்பத்திலிருந்தே அழுத்தத்தை எதிர்கொண்டு சீரான இடைவெளியில் விக்கட்களை இழந்த வண்ணம் இருந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ஓட்டங்க்ள தேவைப்பட்டபோது ஷவியுல்லாஹ் ஷவியுல் அந்த ஓட்டங்களைப் பெற கடுமையாக முயற்சித்தார். ஆனால் பென் ஸ்டோக்ஸ் துல்லியமாக பந்துவீசி இங்கிலாந்தை காப்பாற்றினார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான்  20 ஓவர்களில் 9 விக்கட்களை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் 9ஆம் இலக்க வீரர் ஷவியுல்லாஹ் ஷவிக் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களையும் சமியுல்லாஹ் சன்வாரி 22 ஓட்டங்களையும் நூர் அல் ஸர்தான் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஆதில் ரஷித் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கட்களையும் டேவிட் வில்லி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கட்களையும் கைப்பற்றினர்.

சர்வதேச கிரிக்கட் பேரவையில் பூரண அங்கத்துவம் உடைய எந்தவொரு நாட்டையும் வெற்றிகொள்வதற்கான ஆற்றல் தங்களிடம் இருப்பதாக ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் நேற்றுமுன்தினம் கூறியபோதிலும் இங்கிலாந்துடனான உலக இருபது 20 கிரிக்கட் போட்டியில் அதனை அவரால் நிரூபிக்கமுடியாமல் போனது. எனினும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்பதை ஆப்கானிஸ்தான் அணியினர் நிரூபித்தனர்.