(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பில் சீர்திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்தே ஐக்கிய தேசிய கட்சி சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு மஹிந்தராஜபக்ஷ அல்லது அவரது குடும்பத்தினர் மீண்டும் ஆட்சியை கைபற்ற முடியாதளவிற்கு 19 ஆம் அரசியலமைப்பு சீர் திருத்தத்தில் அவர்களுக்கு சாதகமான முறையில் திருத்ததங்களை மேற்கொண்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்தார். 

பிரதமர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

பதவி காலத்தில் ஜனாதிபதி இறந்தால் அடுத்த மூன்று மாத காலத்திற்கு பிரதமர் தற்காலிகமாக ஜனாதிபதியாக செயற்படுவார் என காணப்பட்ட சரத்தினை தமக்கு சாதகமான முறையில் இவ்வாறு மாற்றியமைத்துள்ளனர். இதன் பின்னணியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கொலை சதிமுயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் அதில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டுமொரு தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் ஒருவர் இரு தடவைக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற மாற்றத்தை கொண்டு வந்தனர். 

பசில் ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் தேர்தலில் போட்டிடக் கூடாது என்பதற்காக இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும், நாமல் ராஜபக்ஷவை முடக்குவதற்காக 35 வயதுக்கு உட்பட்டோர் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இது நாட்டுக்காக மாற்றியமைக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் அல்ல.