(இரோஷா வேலு) 

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் நேற்று  இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  கொழும்பு 15 ஹேனமுல்ல முகாம் பகுதியில் வைத்து போதைப்பொருள் விற்பனை முகவராக செயற்பட்டு வந்த பெண்ணொருவர் மோதரை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 5 கிராம் 700 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. 

  ஹேணமுல்ல ரந்திய உயன முகாமில் வசித்துவரும் 29 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள மோதரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் அம்பலன்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை சோனையிட்ட வேளையில் குறித்த முச்சக்கர வண்டியிலிருந்த இரண்டு பெண்கள் உட்பட 6 வயது குழந்தையொன்றும் போதைப்பொருளை தம்மிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது அம்பலன்கொட கடற்கரை வீதியில் வசித்து வரும் 38 வயதுடைய சுசிதா இரோஷினி கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரிடமிருந்து 2 கிராம் 160 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் விற்பனையின் மூலம் பெறப்பட்ட 4 இலட்சத்து 22 ஆயிரத்து 600 ரூபா ரொக்கப் பணமும் மீட்கப்பட்டது. 

அதனுடன் குறித்த பெண்ணின் சகோதரியான அதே பிரதேசத்தில் வசித்து வரும்  40 வயதுடைய பிரபோதினியும் 2 கிராம் 110 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் கைதுசெய்த வேளையில் குறித்த முச்சக்கர வண்டியில் குறித்த பெண்களின் 6 வயது நிரம்பிய குழந்தையொன்றும் இருந்துள்ளது. 

இந்நிலையில் அக்குழந்தையையும் சோதனையிட்ட வேளையில், அக்குழந்தையின் காற்சட்டையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 95 மில்லிகிராம் நிறையுடைய 8 பக்கெட்டுகளிலான ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் 4 கிராம் 365 நிறையுடைய மொத்த ஹெரோயின் போதைப்பொருளும், சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

எனினும் சம்பவத்தின் போது பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள முச்சக்கர வண்டியானது  வாடகைக்காக அமர்த்தப்பட்டது என விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அச்சிறுமியையும் பொலிஸார் கடும் நிபந்தணைகளின் கீழ் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் குறித்த வண்டியின் சாரதியையும் விடுவித்துள்ளனர்.