(ப.பன்னீர்செல்வம், ஆர். ராம்)

தகவலறியும் சட்ட மூலத்திற்கு வடக்கு, வடமேல், சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகள் திருத்தங்களுடன் ஆதரவளித்துள்ளதோடு ஏனைய, மேல்,தென், ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைகள் ஏகமனதாக ஆதரவளித்துள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரிய சபையில் அறிவித்தார்.

இன்று புதன் கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவித்தல் நேரத்தின் போது மேற்கண்ட அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சபைக்கு விடுத்ததாக குறிப்பிட்டு அதனை சபாநாயகர் முன்வைத்திருந்தார்.

அவ்வறிவிப்பில் மேலும் குறிப்பிடுகையில் அரசியலமைப்பில் தகவலறியும் சட்டமூலத்தை உள்ளீர்ப்பதற்கான மாகாண சபைகளின் அனுமதி கிடைத்துள்ளது. வடக்கு மாகாணசபை, வடமேல் மாகாண சபை, சப்ரகமுவ மாகாண சபை ஆகியன திருத்தங்களுடன் தமது ஆதரவை அளித்துள்ளன.

அதேநேரம் மேல்மாகாண சபை, தென்மாகாண சபை, கிழக்கு மாகாண சபை, ஊவா மாகாண சபை, வடமத்திய மாகாண சபை, மத்திய மாகாண சபை ஆகியன எவ்விதமான திருத்தங்களுமின்றி ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளன என்றார்.