இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று பிரிஸ்பேனில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1:20 க்கு ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் அவுஸ்திரேலிய  அணியுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இந் நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கிடையலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஆரம்பாகவுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரையில் இறுதியாக நடைபெற்று முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3:1 என்ற கணக்கிலும், இருபதுக்கு 20 தொடரை 3:0 என்ற கணக்கிலும் வெற்றியீட்டி வெற்றிக் களிப்புடன் உள்ளது. 

அத்துடன் அணியில் ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த் போன்ற அதிரடி துடுப்பாட்டக்காரர்களளம், பந்து வீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது போன்ற பந்து வீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளமையானது அவுஸ்திரேலிய அணிக்கு பெரும் சவாலாக அமையும்.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தன் எமிரேட்ஸில் நடைபெற்ற மூன்று இருபதுக்கு 20 போட்டியிலும் தோல்வியை தழுவியை தழுவி 'வைட் வோஸ்' ஆகியிருந்ததுடன், டெஸ்ட் தொடரையும் இழந்திருந்தது.

அத்துடன் கடந்த 17 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.

இது இவ்வாறிருக்க ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இருப்பதன் காரணத்தினால், பலமிக்க இந்திய அணியை எதிர்கொள்வதென்பது பாரிய சிரமம் மிக்க தாக அமையும். 

எனினும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியில் மெக்ஸ்வெல், கிறிஸ் லின் போன்ற அதிரடி துடுப்பாட்ட வீரர்களும், நாதன் கவுல்டர் நைல், ஆண்ட்ரூ டை, எடெம் ஜாம்பா போன்ற பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பிடித்துள்ளமை அணிக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. 

இதுவரை இவ் விரு அணிகளும் சர்வதேச ஒருநாள் 128 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 45 போட்டிகளிலும், அவுஸ்திரேலிய அணி 73 போட்டிகளிலும் வெற்றிகொண்டுள்ளதுடன், 10 போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. 

டெஸ்ட் அரங்கில் இவ்விரு அணிகளும்  94 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 26 போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி 41 போட்டிகளிலும் வெற்றிகொண்டுள்ளது. அத்துடன் ஒரு போட்டி எவ்வித முடிவுகளின்றியும், 26 போட்டி சமநிலையிலும் முடிவடைந்துள்ளது.

மேலும் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் இவ் விரு அணிகளும் 15 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 10 போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.