மேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மேல் மாகாண சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சில உறுப்பினர்கள் சபையில் இருந்த கணனியில் ஆபாசக் காட்சிகளை பார்வையிட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாணத்தின் பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.

நவீன வசதிகளுடன் கூடிய இந்த கட்டடத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் இணையத்தள வசதிகளுடன் நவீன கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன. 

தலா 6 இலட்சத்து 40 ஆயிரம் பெறுமதியான 150 கதிரைகளை இந்த கட்டடத்திற்கே கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இந்நிலையில் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான சபையின் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.

இதன்போதே முதலமைச்சர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மூவர் ஆபாசக் காட்சிகளை பார்வையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

இந்நிலையிலேயே இவர்களுக்கு எதிராக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவின் பணிப்புரைக்கு அமைவாகவே  விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

சபைக்குள் இவ்வாறான சந்தர்ப்பம் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சபைக்கு இணையத்தள வசதியினை வழங்கும் அமைப்பிடம் அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடனேயே சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாகாணத்தின் பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.