வங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க பிரதேசமானது அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழமுக்கமாக மாற்றமடைவதுடன், மேற்கு திசை நோக்கி நகர்வடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

தன் காரணமாக நாடு முழுவதும் அதிகரித்த மழை பெய்வதோடு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டவியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் இது தொடர்பில் தெரிவிக்கையில், 

வட மாகாணத்தின் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் வரையிலும், ஏனைய பிரதேசங்களில் 100 மில்லி மீற்றரை அண்மித்ததாக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். இவ்வாறு அதிக மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும். மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில பிரதேசங்களில் காலை வேளைகளில் பனி மூட்டம் காணப்படும். 

வங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க பிரதேசம் தீவிரமடைந்து தாழமுக்கமாக மாற்றமடைவதன் காரணமாக வடகடல் பிராந்தியத்தில் மழை வீழ்ச்சி அதிகரித்து காணப்படும். எனவே முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன் துறையூடாக, மன்னார் வரையான கடல் பிரதேசங்களுக்கு மீன்வர்கள் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம் காலியூடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும். அதே வேளை முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன் துறையூடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும். 

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம் காலியூடாக மாத்தறை வரையான கடற்பிரதேசங்களில் காற்றானது மணித்திலாயத்திற்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வேகத்தில் தென் மேற்கு திசையூடாக மேற்கு நோக்கி வீசும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பிரதேசங்களில் மணிக்கு 25 தொடக்கம் 30 கிலோ மீற்றர் வேகத்தில் தென் கிழக்கு நோக்கி வீசும் காற்றின் வேகமானது, முல்லைத்தீவு தொடக்கம் காங்கேசன்துறையூடாக மன்னார் வரையான கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும். 

அத்தோடு தொடர்ச்சியாக மழை பெய்கின்ற கடற்பிராந்தியங்கள் கொந்தழிப்புடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக காற்றின் வேகமானது 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும். இதன் போது கடல் மிகவும் கொந்தழிப்புடன் காணப்படும் என்றார்.