பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி ஒருவர் தன்னுடைய நிர்வாண படங்களை வெளியிட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் அதனை பெரிது படுத்தாமல் தன்னை போல பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தனது முகத்தை வெளிப்படையாக காட்டி போராடி வருகின்றார். அவரது இச் செயல் உலகவில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆப்பிரிக்காவின் சாட் நாட்டைச் சேர்ந்த சொகவுரா என்ற 16 வயது சிறுமி பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது காரில் வந்த 5 பேர்கொண்ட கும்பல் அவரை கடத்தியுள்ளது. 

பின்னர் ஊருக்கு வெளியில் உள்ள இடத்தில் வைத்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர். 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களில் வாரிசுகள் ஆவர். 

இதனால் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்யமுடியாத சொகவுரா தாம் முன்னரே வசித்த பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பி வந்துள்ளார். 

மேலும் தனக்கு நேர்ந்த சம்பவத்துக்கு நீதி வேண்டி அவர் போராட தொடங்கினார். எனவே, இந்த பலாத்கார சம்பவம் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களில் வெளிப்படையாக பேசினார். மேலும் தனது முகத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அவரது செயல் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களுக்கு கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, பாலியல் துஷ்பிரயோகத்தின் போது எடுத்த சொகவுராவின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

எனினும் நிர்வாண கோலத்தில் தனது மானத்தை காப்பாற்றுவதற்காக கதறி அழும் சொகவுராவின் புகைப்படங்கள் பார்ப்பவர்களில் மனதை பெரிதும் பாதித்துள்ளது.

இதையடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சொகவுரா கூறியதாவது, என்னை போன்ற பல சிறுமிகளும் பெண்களும் இவ்வாறு பலாத்காரத்துக்கு உள்ளாகுகின்றனர். அவர்களுக்கு நீதி கிடைத்தாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவு நடைபெற்று வருகின்றன. போதிய கல்வியறிவு இன்மை, மூட பழக்க வழக்கங்கள் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.