இலங்கை முன்னொருபோதும் சந்திக்காத பாரிய பொருளாதார குழப்பத்தை  எதிர்கொள்ளும் நிலையிலுள்ளது என மங்களசமரவீர கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 26 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொறுப்பற்ற நடவடிக்கைகள் இலங்கை உடனடியாக செலுத்தவேண்டிய கடனை கூட செலுத்த முடியாத ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2014 ஜனவரியில் ராஜபக்ச பெற்ற கடனிற்காக 2019 ஜனவரியில் நாங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள மங்கள சமரவீர கடன்களை மீளச்செலுத்தும் விடயமும் பாராளுமன்றத்தின் கீழ் வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

26 ஒக்டோபரில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்  சர்வதேச சந்தையில் இலங்கையின் நம்பகதன்மையை மாற்ற முடியாத அளவிற்கு பாதித்துள்ளன எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

நாங்கள் பொருளாதாரரீதியில் வீழ்ச்சியை காணும் நிலையை நோக்கி தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம், கிரேக்கம் எதிர்கொண்ட நிலையை நோக்கி நாங்கள் செல்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தேவையற்ற துரதிஸ்டவசமான நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கான ஒரேயொருவழி ஜனாதிபதி ஒக்டோபர் 26 ம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தை அங்கீகரிப்பதே எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.