'இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் கெடுதியான அனுபவங்கள் மிகுந்த படிப்பினைகளைத் தருபவையாகும்.2015 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் தன்பாட்டிலேயே மேம்படும் என்று மோடி அரசாங்கம் நினைத்தது.

சீனச் சார்புடைய மகிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தேர்தல்களில் சிறிசேனவுக்கு இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவு சீனாவுடனான நெருக்கமான உறவுகளை கொழும்பு பெருமளவுக்குத் தளர்த்திக்கொள்ள வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.பதிலாக, சீன -- இலங்கை உறவுகள் மேலும் ஆழமாகின. கடனில் மூழ்கியிருக்கும் இலங்கை கேந்திரமுக்கியத்துவம்வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை  சீனாவுக்கு கையளித்தததையே காணக்கூடியதாக இருந்தது.அதனைத் தொடர்ந்து இலங்கையில் சீனாவின் செல்வாக்கு வெகுவாக வளர்ந்தது.இந்தியா தன்முனைப்புடன் செயற்படாவிட்டால் இதே நிலைமை மாலைதீவிலும் ஏற்படலாம்'.

இவ்வாறு இந்தியாவின் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான ' டெக்கான் ஹெரால்ட்' செவ்வாய்கிழமை அதன் ஆசிரிய தலையங்கத்தில் மோடி அரசாங்கத்தை எச்சரிக்கை செய்திருக்கிறது.  

 ' மாலைதீவை மீளக்கட்டியெழுப்ப சந்தர்ப்பம்' என்ற தலைப்பில் தீட்டப்பட்டிருக்கும் அந்த ஆசிரிய தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது ;

மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மது சோலீயின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை மாலேக்கு மேற்கொண்ட விஜயம் இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான உறவுகளில் முக்கியமான ஒரு மைல் கல்லாக அமைகிறது.அந்த தீவுக்கூட்ட நாட்டுக்கு 7 வருடங்களுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதலாவது விஜயமாகவும் இது விளங்குகிறது.மாலேயில் இருந்து வருகின்ற சமிக்ஞைகளுக்கு டில்லியின் பதில் துரிதமானதாகவும் வலிமையானதாகவும் நிலைவரங்களை சரியாக உணர்ந்துகொண்டதாகவும் அமையுமேயானால், இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான உறவுகளில் புதியதொரு அத்தியாயத்தை திறக்கக்கூடியதாக இருக்கும்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன்  சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகள் தொடர்பில் மாலைதீவின் புதிய அரசாங்கம் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெளிவானது.அந்த உறவுகள் மாலைதீவின் நலன்களுக்கு எதிரானவையாக அமைந்து  நாட்டின் கருவூலத்தை காலியாக்கி பெரும் கடன்சுமைக்குள் தள்ளிவிட்டது என்றே புதிய அரசாங்கம் கருதுகிறது.சீனக் கம்பனிகளுடனான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட நிபந்தனைகள் குறித்தும்   அரசாங்கத்தின் சகல மட்டங்களிலும் அதிகாரிகளினால் மாலைதீவு நிதி சூறையாடப்பட்டது குறித்தும் விரிவான விசாரணைகளை நடத்தப்போவதாக சோலீ உறுதியளித்திருக்கிறார். சீனாவின் அரவணைத்து அமுக்கும் செயற்பாடுகளில் இருந்து நாட்டை விடுவித்து வழிநடத்துவதில் சோலீ அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.மாலைதீவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளுக்கு  இந்தியாவின் ஆதரவை புதிய அரசாங்கம் முக்கியமாக எதிர்பார்க்கிறது. மாலைதீவுடனான உறவைக் கட்டியெழுப்ப பன்முக தந்திரோபாயமொன்றை டில்லி விரைந்து நடைமுறைப்படுத்தவேண்டும்.

மாலைதீவு சீனாவுடனான உறவுகளை முறிக்கும்வரை காத்திராமல் அந்நாட்டு அரசாங்கத்துக்கு இந்தியா நிதி உதவியையும் வேறு ஆதரவையும் வழங்க வேண்டியது அவசியமாகும். மாலைதீவு அரசாங்கத்தை மாத்திரமல்ல, அதன் மக்களையும் ஆதரிக்கின்ற நல்லெண்ணமுடைய  ஒரு அயல்நாடாக இந்தியா தன்னை காண்பிக்கவேண்டும். மாலைதீவில் இந்தியாவின் வகிபாகம் அந்நாடு ஒரு சிறிய அரசு என்றவகையில் கொண்டிருக்கக்கூடிய பாதுகாப்பு மற்றும் சுயாதிபத்திய அக்கறைகளை உணர்ந்து மதிப்பளிப்பதாக இருக்கவேண்டும்.

மாலைதீவு இந்தியக் கரையோரத்துக்கு நெருக்கமாக இருக்கின்ற காரணத்தினால் மாத்திரமல்ல, இந்து சமுத்திரத்தில் அதன் கேந்திரமுக்கியத்துவ அமைவிடம் காரணமாகவும் இந்தியாவுக்கு முக்கியமான ஒரு அயல்நாடாக விளங்குகிறது.இந்தியாவினதும் கிழக்கு ஆசியாவினதும் பெருமளவு  வர்த்தகம் குறிப்பாக எண்ணெய் இறக்குமதி மேற்கொள்ளப்படுகின்ற முக்கியமான கடல்வழி பாதைகளுக்கு நெருக்கமாக மாலைதீவு இருக்கிறது.

இந்தியா மாலைதீவுடனான அதன் உறவுகளை உதாரணமாகக் காட்டி அதன் நிபுணத்துவத்துவம் மற்றும் ஆதரவு மீது  ஏனைய தெற்காசிய நாடுகளும் நம்பிக்கை வைக்கக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தமுடியும்.மாலைதீவில் புதுடில்லி வெற்றிகரமான முறையில் தனது அணுகுமுறைகளைக் கையாளுமேயானால், அந்த நாட்டுக்கான மோடியின் விஜயம் தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கை இந்தியா மாற்றியமைப்பதன் தொடக்கமாக அது அமைய முடியும்.