(நா.தினுஷா)

சட்டத்தனால் தண்டிக்கப்பட வேண்டியவர்களுடன் ஜனாதிபதி தொடர்பு கொண்டு, தனது அரசியல் நன் மதிப்பினை மேலும் இழந்து விட வேண்டாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த  அவர்,

 அரசியலமைப்பிற்கு ஏற்ப நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வந்தால்  தான் பதவி விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது. 

கடந்த  மாதம் 26 ஆம் திகதி எவருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக பிரதமர் பதவியை ஏற்கும் பொழுது இந் நியமனம் அரசியலமைப்பிற்கு  ஏற்ப காணப்படுகின்றதா என்பதை அவர் ஏன் சிந்திக்கவில்லை. 

தன்னையும் தன் குடும்பத்தினரையும் கடந்த கால குற்றச் செயல்களில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கமே அவரிடம் ஆரம்பத்தில் இருந்து காணப்பட்டது அதற்காக  கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.