தமிழகத்தின் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த அ.தி.முகவைச் சேர்ந்த மூன்று கைதிகளும் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ஆளுநர் மாளிகை உரிய விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து  ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள விளக்கக் குறிப்பில்,

“ தமிழகத்தின் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த மூன்று பேரும் சட்ட நடைமுறையின் அடிப்படையிலேயே விடுதலை செய்யப்பட்டனர். மூன்று பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அரசு ஆளுநர் மாளிகைக்கு பரிந்துரை செய்திருந்தது. அரசியலமைப்புச் சட்டம் 161 ஆவது பிரிவின் கீழ், 13 ஆண்டுகள் மூன்று பேரும் சிறையில் இருந்ததைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்யப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே அனுப்பிய மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியது. மீண்டும் தமிழக அரசு அவர்களை விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கொலை செய்யும் நோக்கத்தோடு அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என தலைமைச் செயலாளரும், தலைமை சட்டத்தரணியும் ஆளுநர் மாளிகைக்கு விளக்கம் அளித்ததை ஏற்றுக் கொண்டே விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.” என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அ.தி.முகவைச் சேர்ந்த முனியப்பன், ரவீந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனிடையே திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா ஜ கவின் பாராளுமன்ற உறுப்பினர்  இல கணேசன்,“ அ.தி.மு.க தொண்டர்கள் மூன்று பேரை விடுதலை செய்தது பிரச்சினை இல்லை. அதே போல் கோவை சிறையில் ஆயுள் கைதியாக உள்ள இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் போன்றவர்களையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் ” என்று கோரிக்கை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.