அமெரிக்காவின், சிக்காகோவில் உள்ள வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். 

சிக்காகோவில் உள்ள மெர்சி வைத்தியசாலையின் வாகன தரப்பிடத்தல் புகுந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்த ஒரு பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனைப் பார்த்த பொலிஸார் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பதில்  தாக்குதல் நடத்தினர். 

இந்த துப்பாக்கி சூட்டில் வைத்தியாசலையின் இரண்டு பெண் ஊழியர்கள், ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமி என 4 பேர் உயிரிழந்தனர். 

துப்பாக்கி சூடு நடத்தியவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. 

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஒரு பெண்ணை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளார். அந்த பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.