(எம்.மனோசித்ரா)

சபாநாயகரின் செயற்பாடுகள் காரணமாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கெளரவத்திற்கு அவ பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பைபிளை கொண்டு எதிர்தரப்பினர் மீது தாக்குதல் நடத்தினேன் என்று முன்வைக்கப்படும் குற்றச் சாட்டு உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற கலவரத்தின்போது என்னால் இயலுமான வரை ஒதுங்கியிருந்தேன். எனினும் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கத்தியிருப்பதை அவதானித்த பின்னரே நானும் தாக்கினேன். 

எனினும் சபாநாயகர் அது தொடர்பில் எந்த அவதானமும் செலுத்தாது, பாராளுமன்றத்திற்குள் வந்து முறையற்ற விதத்தில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிராக ஜே.வி.பி முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்தினார். 

எனவே தான் இது தொடர்பான தீர்மானமொன்றினை எடுக்குமாறு வலியுறுத்தி அன்று அவரை ஆசனத்தில் அமரவிடாது அவ்வாறு செயற்பட்டோம். ஆனால் பைபளில் தாக்கியதாக கூறுகின்றனர். அது உண்மைக்கு புறம்பானதாகும்.