நாட்டின் பொருளாதார அபிவிருத்தி பிரச்சினைகளை தீர்ப்பதில் விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி துறையின் உதவி அரசாங்கத்திற்குத் தேவையென ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன இன்று (19) முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தேசிய ஆராய்ச்சி சபையால் வருடாந்தம் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது.

விஞ்ஞான, தொழிநுட்பம் ஆராச்சித்துறைக்காக வருடாந்தம் வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை இதனைப் பார்க்கிலும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்ற கொள்கை தீர்மானத்தைத் தான் தெளிவாக ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இது தொடர்பில் திரைசேரிக்கும் அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களுக்கும் பணிப்புரை விடுக்கவுள்ளதாகத்  தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய தரப்பினரான விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்கள் தற்போது நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதாரத்திற்கும் மேற்கொண்டு வரும் பணிகளை ஜனாதிபதி பாராட்டினார்.

தேசிய அபிவிருத்தி திட்டங்களிலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக முகங்கொடுக்க வேண்டியுள்ள பொருளாதார சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நிபுணர்களின் உதவி அவசியமாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வறட்சியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது மட்டுமே இடம்பெறுகின்றது என்று முன்கூட்டியே திட்டங்களை வகுத்து அந்தச் சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு பொதுமக்களுக்கும் விவசாய சமூகத்திற்கும் வருடாந்த திட்டமிடல்களை மேற்கொள்ளவும் நீர் முகாமைத்துவத்திற்கும் குறித்த ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மருத்துவ, விவசாய பொறியியல் துறைகளில் உயர் நியமங்களுடன் கூடிய விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இராஜாங்க அமைச்சர் மொஹான்லால் கிரேரு, உயர் கல்வி விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயவர்தன, தேசிய ஆராய்ச்சி சபையின் தலைவர் பேராசிரியர் ஜனக டி சில்வா, தேசிய ஆராய்ச்சி சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி மனிஷா ராஜபக்ஷ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.