(எம்.மனோசித்ரா) 

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை சவாலுக்கு உட்படுத்தியவர்கள் வெள்ளிக்கிழமை அதனை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க , மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை சட்டப்பூர்வமற்ற கலைக்கப்பட்ட ஒன்று என்பது உறுதிப்பட்ட விடயம் எனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்ற அமர்வுகள் இன்று திங்கட்கிழமை ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையிலேயே சம்பிக ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எம்மிடம் காணப்படுகின்றது. எனவே பாராளுமன்றத்தில் நியமிக்கப்படும் தெரிவுக்குழுவில் பெரும்பாண்மை எமக்கு வழங்கப்பட வேண்டும்.  மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை கலைக்கப்பட்டதாக சபாநாயகர் கரு கருஜயசூரிய கடந்த 15 ஆம் திகதி  அறிவித்தார். 

இதனை சவாலுக்கு உட்படுத்தியவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி பெயர் மூலம் அல்லது இலத்திரனியல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மயை நிரூபிக்க வேண்டும். மேலும் அதனை நிலையியற்கட்டளைக்கேற்ப  நிரூபிக்க வேண்டும்.