(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.எம்.வஸீம்)

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க பெயர் அடிப்படையில் அல்லது இலத்திரணியல் முறையில் பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயாராகவே இருந்தோம். என்றாலும் சட்டவிரோத அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லாதமையால் அவர்கள் பாராளுமன்றத்துக்குள் வாக்கெடுப்பு நடத்துவதை தொடர்ந்து எதிர்த்து வந்தனர். அதனால்தான் பாராளுமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை ஒத்திவைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்றன உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர். 

அத்துடன் அடையாள ரீதியில் பாராளுமன்றத்தின் பிரதமரின் பெயலாளர் எந்த செலவினங்களையும் செய்ய முடியாது என்ற பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்திருக்கின்றோம். எதிர்வரும் 29ஆம் திகதி அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்த்திருக்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.

பாராளுமன்ற அமர்வு இன்று முடிவடைந்த பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களால்   பாராளுமன்ற உறுப்பினர் அறையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.