(இராஜதுரை ஹஷான்)

நாடு எதிர்கொண்டுள்ள  அரசியல் நெருக்கடிகளுக்கு  ஒரே  தீர்வு சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு  எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வந்து அவரை பதவி விலக்குவதேயாகும்  என  பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர்  ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படுவதாக இருந்தால் உடனடியாக அவரே சுயமாக பதவி விலகிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் தனது விசுவாசத்தை ரணிலுக்கு வெளிப்படுத்தலாம். அதற்கு நாம் எவ்வித  தடைகளையும் ஏற்படுத்த மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அரசியல் நெருக்கடியினை  சபாநாயகரே தீவிரப்படுத்தியுள்ளார். ஆகவே அவருக்கு எதிராக முதலில் நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வந்து நிறைவேற்றி பதவி விலக்க வேண்டும் அல்லது அவரே தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள சுயமாக பதவி துறக்க வேண்டும் என்றார்.