பிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான யோசனையொன்றை ஐக்கிய தேசிய கட்சி இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட வேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் இது குறித்து தீர்மானிப்பதற்கு தங்களிற்கு ஐந்து நாட்கள் அவசியம் என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 29 ம் திகதி இந்த யோசனை மீது வாக்கெடுப்பை நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் மத்தியில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரச நிதியை கையாள்வதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திடமேயுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் என தெரிவிக்கப்படுபவரின் அலுவலகத்திற்கான நிதியை நாங்கள் நிறுத்துவோம் என தெரிவித்துள்ள அவர் ஏனைய அமைச்சுகளிற்கான நிதியை நிறுத்த தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த நாட்டில் அமைச்சரவை என எதுவும் இல்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து உறுதியாகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.