கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட  தமிழகத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டினர், புதுகோட்டை திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக ஒரு கோடி ரூபாவை தி.மு.க நிவாரண நிதியாக அளிக்கும் என அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“ கஜா புயல்  மற்றும் கன மழையால் தமிழகத்தின்  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 

விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெருந்துயரத்திற்கும், மிகக் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள். புயலும் மழையும் பொதுமக்களின் வாழ்க்கை நிலையை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. 

வரலாறு காணாத சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கத் தேவையான நிவாரணம் , மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிடும் வகையில் திமுக அறக்கட்டளையிலிருந்து ஒரு கோடி ரூபாவும், சட்டப்பேரவை திமுக உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.