இந்தியா, வேலூர் அருகேயுள்ள வனப்பகுதியில் ஐயப்பன் சிலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் சிலை கிடைத்துள்ளதால் பக்தர்கள் வியந்து போய் பக்தியில் மூழ்கினர்.


மேலும், வேலூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் ஐயப்பன் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயிலில் ஐயப்பன் மூலவர் சிலை வைப்பதற்காக அருள்வாக்கு சொல்லும் முதியவரிடம் கிராம மக்கள் அருள்வாக்கு கேட்டுள்ளனர்.

இந்நிலையில், முதியவர் ‘கொட்டாவூர் கிராமத்தில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒடுகத்தூர் வனச்சரகத்திற்குட்பட்ட கருத்தமலைக்கு செல்லுங்கள். அங்கு நடுக்காட்டில் உள்ள பாறை பக்கத்தில் தோண்டி பாருங்கள். ஐயப்பன் சிலை கிடைக்கும்’ என்று அருள்வாக்கு கூறினார்.

இதைக்கேட்ட இளைஞர்கள் சிலர் வேடிக்கையாக முதியவரைக் கிண்டல் செய்துள்ளனர். கிராமத்தில் உள்ள பெரியவர்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பாறைக்குப் பக்கத்தில்  தோண்டிய போதே, அனைவருக்கும் அதிர்ச்சியும், வியப்பும் காத்திருந்தது. சுமார் மூன்று அடி ஆழத்தில் ஒன்றரை அடி உயரமுள்ள ஐயப்பன் கற்சிலை காட்சியளித்துள்ளது. இதுபற்றி தகவலறிந்ததும், ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் காட்டிற்குள் திரண்டு வந்தனர்.

குறித்த ஐயப்பன் சிலை படுத்த நிலையிலேயே இருந்துள்ளது. அச்சுவாமி சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து, சிறப்பு பூஜையும் நடத்தினர். இதையறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து ஐயப்பன் சிலையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.