கொழும்பிலிருந்து வெலிமடையை நோக்கி பண்டாரவளை ஊடாக பயணித்த தனியார் பஸ் ஒன்றில் சுமார் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த தனியார் பஸ்ஸின் நடத்துனர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், விசாரணைகளின் பின் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்போவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து வெலிமடையை நோக்கி சென்ற தனியார் பஸ்ஸில் ஹெரோயின் போதைபொருள் இரகசியமான முறையில் கொண்டுவரப்படுவதாக பண்டாரவளை பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த பஸ்ஸை பண்டாரவளையில் பரிசோதணைக்கு உட்படுத்தியபோது பஸ்ஸில் பந்து ஒன்றில் சிறிது சிறிதாக பக்கட், இடப்பட்டு அடைக்கப்பட்ட நிலையில் ஹெரோயின் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.