ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று மாலை இடம் பெறவுள்ள சர்வகட்சி சந்திப்பினை மக்கள் விடுதலை முன்னணி புறக்கணிக்க  தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலை காரணமாக, கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு இந்த விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த கூட்டத்தினை புறக்கணிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் அண்மைய செயற்பாடுகள் திருப்தியளிக்காத நிலையிலேயே குறித்த கூட்டத்தினை புறக்கணிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.