இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பாமன இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிக்காக 336 ஓட்டங்களை குவித்தது.

இதன் மூலம் இலங்கை அணி 46 ஓட்டத்துடன் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 346 ஓட்டங்களை குவித்தது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 301 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

301 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவின் போது 65.2 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டினை இழந்து 226 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதனையடுத்து போட்டியின் ஐந்தாம் நாளான இன்று 226 ஓட்டங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 74 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 57 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது.

அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் 88 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 57 ஓட்டங்களையும், ரோஷான் சில்வா 37 ஓட்டத்தையும், திக்வெல்ல 35 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேக் 5 விக்கெட்டுக்களையும், மொய்ன் அலி 4 விக்கெட்டுக்களையும், அடீல் ரஷித் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனால் மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வவரும் 23 ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.