- பிரமா ஷெலானி

இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடியை இந்தியா அக்கறையுடன் அவதானித்துக்கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மது சோலீயின் பதவியேற்பு  வைபவத்தில் ( நவம்பர் 17) கலந்துகொள்வதற்காக மாலே சென்றிருந்தார். மோடியின் இந்த விஜயம் இரு மாதங்களுக்கு முன்னர் தேர்தலில் அதிர்ச்சிகரமான தோல்வியடைந்த எதேச்சாதிகார ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு அதிகாரத்தை புதியவரிடம் கையளிப்பதைத் தவிர வேறுவழி கிடையாது என்பதை உறுதிப்படுத்தியது.

இந்தியா இராணுவரீதியில் தலையீடு செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் உட்பட ஜனநாயக நாடுகளிடமிருந்து வந்த ஒருங்கிணைந்த நெருக்குதல்கள் மாலைதீவு ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்த உதவியிருக்கின்றன.ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு சுதந்திரமானதாகவும் நேரமையானதாகவும் அமையாவிட்டால் தடைகள் விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்திய அதேவேளை, ' பொருத்தமான நடவடிக்கைகள் ' எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை செய்திருந்தது.தேரதல் முடிவுகள் தனக்கு எதிராக அமைந்திருந்த போதிலும், தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு யாமீன் தயங்கியபோது ' மக்களின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கவேண்டும் ' என்று வாஷிங்டன் அவரிடம் அறிவுறுத்தியது.

முக்கியமான சகல எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் சிறையில் அடைத்து அல்லது வெளிநாடு சென்று அஞ்ஞாதவாசம் செய்ய நிர்ப்பந்தித்து யாமீன் தனக்கு அனுகூலமான முறையில் தேர்தல் அமையக்கூடியதாக நிலைவரங்களை மாற்றியமைத்திருந்தார்.நீதியரசர்களைச்  சிறைபிடித்து உச்சநீதிமன்றத்தையும் பலவீனப்படுத்தியிருந்தார். ஆனால், பெருமளவுக்கு அறியப்படாதவரான எதிரணியின் பொது வேட்பாளர் சோலீயிடம் யாமீன் கண்ட தோல்வி பொதுமக்கள் மத்தியில் அவரது சர்வாதிகார ஆட்சி மீது எந்தளவுக்கு வெறுப்பு வளர்ந்திருந்தது என்பதை வெளிக்காட்டியது. எதேச்சாதிகார ஆட்சியாளர்கள் தேர்தல்களைத் தங்களுக்கு வசதியான முறையில் அமையக்கூடியதாக மாற்றுவதற்கு சூழ்ச்சித்தனமாக முயற்சிக்காத பட்சத்தில் வாக்காளர்களின் எதிர்ப்பை அவர்களால் ஒருபோதும் கட்டுப்படுத்தவே முடியாது. இதை 2015 ஜனவரியில் இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இவ்வருடம் மே மாதத்தில் மலேசியாவில் பிரதமர் நஜீப் ரசாக்கும் கண்ட தோல்விகள் நிரூபித்தன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடுகளினால் இலங்கை இப்போது அரசியல் நெருக்கடிக்குள் மூழ்கியிருப்பது ஒரு முரண்நகையாகவுள்ளது. அவரது நடவடிக்கைகள் ராஜபக்சவின் எதேச்சாதிகாரப் பாணியில் அமைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கும் அரசியலமைப்பு மாற்றத்தைக்கொண்டுவருவதற்குமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சிறிசேன தற்போது தனது பதவியின் அதிகாரங்களை படுமோசமாகத் துஷ்பிரயோகம்  செய்துகொண்டிருக்கிறார்.ஜனநாயகத்தை முற்றுகைக்குள்ளாக்கியிருந்த பத்து  வருடகால ஆட்சியை நடத்திய ராஜபக்சவுடன்  சிறிசேன தனது மட்டுமீறிய அதிகார ஆசைக்காக எதையும் தாரைவார்க்கத் தயங்காத உடன்பாடொன்றை செய்துகொண்டுள்ளார் என்பது வெளிப்படையானது.

இலங்கையில் சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கூட்டணி கண்டிருக்கும் வீழ்ச்சி மாலைதீவின் ஐக்கிய கூட்டணிக்கு உண்மையிலேயே ஒரு முன்கூட்டிய எச்சரிக்கையாகும்.உயர்பதவிக்குத் தெரிவுசெய்யப்படுபவர்கள் அரசியலமைப்புச் சட்டவிதிகளை மதித்து நடக்காத பட்சத்தில், தங்களது கூட்டணியின் பங்காளிகளின் விருப்பு வெறுப்புகளையும் உணர்ந்து விட்டுக்கொடுத்துச் செயற்படாத பட்சத்தில் ஜனநாயக மீட்சி தலைகீழாக மாற்றப்படக்கூடிய சூழ்நிலை உருவாவதைத் தவிர்க்க இயலாது.மாலைதீவில் சோலீயின் வெற்றி எதிர்க்கட்சிகளின் ஐக்கியத்தினாலேயே சாத்தியமாக்கப்பட்டது.யாமீனின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு முடிவுகட்டவேண்டுமென்ற அவசியம் மாத்திமே எதிரணிக் கட்சிகளிடையே ஐக்கியத்தைக்கொண்டுவந்தது.

சோலீயின் வெற்றியைச் சாத்தியமாக்க உதவியவர்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மௌமூன் அப்துல் கையூமும் முஹம்மது நஷீட்டும் முக்கியமானவர்கள். கையூம் முன்னதாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.மாலைதீவில் முதன்முறையக நடந்த பலகட்சித் தேர்தலில் கையூமைத் தோற்கடித்து ஜனாதிபதியாகப் பதவியேற்றவர் நஷீட். ஆனால் 2012 ஆம் ஆண்டில் கையூமுக்கு விசுவாசமான சக்திகள் உட்பட இஸ்லாமியவாத குழுக்களினால் ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டதை அடுத்து துப்பாக்கி முனையில் நஷீட் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். கடந்த காலத்தின் இந்த நிகழ்வுப்போக்குகளை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது யாமீனுக்குப் பின்னரான மாலைதீவின் அரசியல் உறுதிப்பாடும் ஜனநாயக மேம்பாடும்  சோலீயை வெற்றிபெற வைத்த எதிரணி அரசியல் கட்சிகள் அவரின் பின்னால் தொடர்ந்தும் ஐக்கியமாக அணிதிரண்டு நிற்பதில் காண்பிக்கக்கூடிய மனவுறுதியிலேயே தங்கியிருக்கிறது.

தீவுக்குரிய கலாசாரங்கள் மற்றும் அரசியல் கூட்டணிகளை மாற்றிக்கொள்ளும் போக்கு உட்பட பல விடயங்களில் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையே பொதுத்தன்மை காணப்படுகிறது.மாலைதீவின் உத்தியோகபூர்வ மொழியான திவெஹி சிங்களத்தின் ஒரு கிளை மொழியாகும்.இலங்கையின் குழப்பகரமான அரசியல் திருப்ப நிகழ்வவுகள் மாலைதீவின் புதிய ஜனநாயகத் தொடக்கத்தின் மீது விரும்பத்தகாத ஒரு நிழலை வீழ்த்துகிறது.

இந்தியாவின் கடல்சார் அயல்நாடுகளில் ஜனநாயக நிறுவனங்களுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் உலகின் மிகப்பெரிய எதேச்சாதிகார நாடான சீனாவின் அதிகரிக்கும் வகிபாகம் மற்றும் செல்வாக்கில் இருந்தே வருகிறது.அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது தொடக்கம் தங்களுடன இணங்கிப்போகின்ற தலைவர்களையும் அரசாங்கங்களையும் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றுவது வரை சீன ஆட்சியாளர்கள் ஜனநாயக விரோதப் போக்குகளை உற்சாகப்படுத்திவருகிறார்கள்.

தன்னைக் கொலைசெய்வதற்கான சதித்திட்டத்தின் பின்னணியில் இந்திய புலனாய்வு நிறுவனமான ' றோ ' இருப்பதாக அண்மையில் அமைச்சரவைக் கூட்டமொன்றில் கூறிய சிறிசேன ( அவர்  ' றோ' என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று  ஜனாதிபதி செயலகம் பின்னர் மறுப்பு வெளியிட்டது), அதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தான் விரும்புகிற எந்தவொரு திட்டத்துக்கும் சுமார் 30 கோடி டொலர்களை ' நன்கொடையாக' தருவதாக சீன ஜனாதிபதி சி ஜின்பிங் உறுதியளித்ததாக பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலனறுவையில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சிறுநீரக சிகிச்சை வைத்தியசாலையைச் சீனா நிர்மாணித்துவருகிறது.

நிதியுதவியையும் கடன்களையும் பெருமளவில் வழங்கி இலங்கையை ஒரு பணயக்கைதி போன்று வைத்திருப்பதற்கான முயற்சியின் மூலமாக சீனா அதன் புவிசார் கேந்திரமுக்கியத்துவ இலக்குகளை மேம்படுத்துவதில் எவ்வாறு நாட்டம் காட்டியிருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது சீனாவின் கடன்பொறியில் அகப்படுவதிலிருந்து எவ்வாறு தப்பித்துக்கொள்வது என்பதே புதிய ஜனாதிபதி சோலீ தலைமையிலான மாலைதீவு எதிர்நோக்கப்போகின்ற முக்கியமான சவாலாகும் .தனது பாதுகாவலரான சீனாவின் கடன்பொறிக்குள் மாலைதீவை ஆழமாக மாட்டிவிட்ட யாமீன் தனக்கு வந்த எதிிர்ப்புகளைச் சமாளிக்க ஜனநாயகத்தி்ன் குரல்வளையை நசுக்கினார்.சீனாவிடம் மாலைதீவு பெற்றிருக்கும் கடன் அந்நாட்டின் வருடாந்த வருவாயின் இரண்டு மடங்கையும் விட அதிகமானதாகும்.சீனாவின் செல்வாக்கு வலயத்திற்குள் மாலைதீவை ஆழமாகக் கொண்டுசெல்லும் முயற்சியாக யாமீன் மக்கள் வசிக்காத பல தீவுகளை ஒளிவுமறைவாக  பெய்ஜிங்கிற்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார்.

முதலாவது உலகமகா யுத்தம் முடிவுக்கு வந்த தினத்தின் ( நவம்பர் 11) நூற்றாண்டு கடந்தவாரம் அனுஷ்டிக்கப்பட்டது.நிலப் பிராந்தியங்களையும் வளங்களையும் சார்பு அரசுகளையும் கைக்குள் போட்டுக்கொள்வதற்காக ஐரோப்பிய வல்லரசுகளிடையே ஏற்பட்ட போட்டாபோட்டியே அந்த உலக யுத்தத்தை மூளவைத்தது.இன்று சீனா அதே நோக்கத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.இந்தியாவின் கடல்சார் அயல்நாடுகளில் அதிகரித்துவரும் சீன ஊடுருவல் இந்தப் பிராந்தியத்தை பாதுகாப்பற்றதாகவும் உறுதிப்பாடு இல்லாததாகவும் வைத்திருக்கப்போகிறது.

 - (இந்துஸ்தான் டைம்ஸ்)