இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட  நிறைவின்போது இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை குவித்துள்ளது.

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பாமன இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிக்காக 336 ஓட்டங்களை குவித்தது.

இதன் மூலம் இலங்கை அணி 46 ஓட்டத்துடன் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து மூன்றாம் நாளான நேற்றைய தினம் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 76 ஓட்டங்களை எதிர்கொண்டு 9 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. 

இதன் மூலம் இங்கிலாந்து அணி 278 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.ஆடுகளத்தில் பென் போக்ஸ் 51 ஓட்டத்துடனும், அண்டர்சன் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் இன்று ஆரம்பமான போட்டியின் நான்காம் நாளான ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி 80.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 301 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

அணி சார்பில் ஜோ ரூட் 124 ஓட்டங்களையும், பென் போக்ஸ் 65 ஓட்டத்தையும், றொறி பெர்ன்ஸ் 59 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுக்களையும், தில்றூவான் பெரோ 3 விக்கெட்டுக்களையும், மலிந்த புஷ்பகுமார 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

301 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாள் ஆட்ட முடிவின் போது 65.2 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கெட்டினை இழந்து 226 ஓட்டங்களை குவித்துள்ளது.

அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் 88 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 57 ஓட்டங்களையும், ரோஷான் சில்வா 37 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜெக் லேச் 4 விக்கெட்டுக்களையும், மொய்ன் அலி 2 விக்கெட்டுக்களையும், அடீல் ரஷதித்  ஒரு விக்கெட்டினையும் பெற்றுக் கொண்டனர்.

இதனால் இலங்கை அணிக்கு வெற்றிக்கு இன்னும் மூன்று விக்கெட் கைவசமிருக்க 75 ஓட்டங்கள் மாத்திரம் தேவை என்ற நிலையில் உள்ளது. 

எனினும் நாளை ஆரம்பமாகவுள்ள போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை  அணி வீரர்கள் இங்கிலாந்து  அணிப் பந்து வீச்சாளர்களின் பந்துகளுக்கு தாக்குப் பிடித்து வெற்றியடைவார்களா அல்லது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தொடரை 2:0 என்ற கணக்கில் பறிகொடுப்பார்களா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.