“தங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரிதிநிதிகளுக்காக மக்கள் தங்களது சம்பளத்தில் தங்களது வயிற்றுப் பசியை போக்கிக் கொள்ள கொள்வனவு செய்யம் அத்தியாவசிய உணவுப் பொருட்களிலிருந்து அனைத்திற்கும் வரி செலுத்துகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என ஸ்ரீலங்கா இளைஞர் பாராளுமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள நாட்டின் அரசியல் நிலை குறித்தும் பாராளுமன்றில் மக்கள் பிரதிநிதிகளின் விமர்சனத்திற்குரிய செயற்பாடுகள் குறித்துமே ஸ்ரீலங்கா இளைஞர் பாராளுமன்றம் மேற்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில்,

கடந்த ஒக்டோம்பர் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் நாட்டின் அரசியல் நிலை குறித்து நாட்டு பிரஜைகள் என்ற ரீதியிலும் இளைஞர்களின் பிரதிநிதிகள் என்ற வகையிலும் நாங்கள் மிகுந்த விரக்தியில் இருக்கிறோம்.

முதலாவதாக தாய் நாட்டின் எதிர்காலத்தை மிக சிறப்பாக வடிவமைப்பதற்காக எதிர்காலத்தில் இளைய தலைமைத்துவத்தை  உருவாக்குவதை நோக்காக கொண்ட ஸ்ரீலங்கா இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாட்டை பாதுகாக்க வேண்டிய தீர்மானங்களை எடுக்க வேண்டிய இச் சந்தர்ப்பத்தில் மௌனமாக இருக்க போவதில்லை என கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

ஆசியாவிலேயே முதல் முறையாக சர்வ ஜன வாக்குரிமை கிடைத்த கீர்த்திக்குரிய நாடு எனவும் ஜனநாயக வியூகங்கள் தொடர்பாகவும் அறிந்திருந்த இளைஞர்களாகிய நாங்கள் கடந்த சில நாட்களாக வரலாற்றையே கேவலப்படுத்தும் வகையில் நாட்டின் அரசியல் நிலை குறித்து கவலையடைகிறோம்.

மக்கள் பிரதிநிதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், பாராளுமன்ற வளாகத்தை கேலிக்கைக்குரியதாக்குவதும், அரச சொத்துக்களை வேண்டும் என்றே சேதப்படுத்தல், கைகளில் கிடைப்பதை கொண்டு எறிதல், மதிப்பிற்குரிய நாட்டின் உயர் அரசியல் கொள்கை அடங்கிய புத்தத்தை கொண்டு ஒருவரை தாக்குதல், நாட்டின் மதிக்கத்தக்க உயர் பதவியிலிருப்பவரை நாற்காலியை கொண்டு தாக்குதல் மற்றும் இழிவான சொற் பிரயோகங்களால் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்வது போன்ற கேவலமான செயற்பாடுகளை தங்கள் வாக்குகளால் தெரிவு செய்து பாராளுமன்றிற்கு அனுப்பி வைத்த மக்கள் பாரத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு நினைவு படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

இந் நிலையானது 20மில்லியனிற்கும் அதிகமான மக்களை மட்டுமல்ல எதிர்கால சந்ததியினரையும் மிக மோசமான விதத்தில் பாதிக்குமென தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்நிலையானது நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்பு செலுத்துவதால் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் எதிர்காலத்தில் அரசியல் தலைவர்களின் செயற்பாட்டிற்கு வந்தி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இறுதியாக கூறிக்கொள்வது என்னவென்றால் பாராளுமன்றில் ஜனநாயகத் தன்மைகளுக்கு மதிப்பளித்து, பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்குட்பட்டு மக்கள் பிரதிநிதிகளின் முன்மொழிவுகளுக்கு காது கொடுத்து அதன் பின்னர் முறையாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த தெரியாத எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் பாராளுமன்றில் இடம் பெரும் ஸ்ரீலங்கா இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை பார்த்து அதிலிருந்து தேர்ச்சிகளையும் அனுபவங்களையும் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறோம்” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

.