தமிழகத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினரை கொலை செய்து கர்நாடகா சிவனசமுத்ரா பகுதியில் காவேரி ஆற்றில் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கர்நாடகா சிவனசமுத்ரா பகுதியில் காவேரி அருகே இளம் தம்பதியினரின் உடல்கள் அழுகிய நிலையில் கைப்பற்றப் பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
குறித்த சம்பவம் சாதி கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பதினர் மூவரை இது வரை கைது செய்ததாகவும் இதில் பெண்ணின் தந்தையும் அடங்குவார்.

மிகவும் அழுகிய நிலையில்25 வயதான என்.நந்தீஷ் என்பவரின் சடலம் நவ.13ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மனைவி எஸ்.ஸ்வாதியின் உடல் காவேரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஸ்வாதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர், நந்தீஷ் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர். இருவரும் பாகலூரின் ஷூலக் கொண்டப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் வீட்டின் சம்மதம் கிடைக்காததால் வெளியேறி ஆகஸ்ட் 15ஆம் திகதி சூலகிரியிலுள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர், பிறகு தங்கள் திருமணத்தை அதிகாரபூர்வமாக செப்டெம்பரில் பதிவு செய்துள்ளனர்.
நந்தீஷ்-ஸ்வாதி இருவரும் ஷூலக்கொண்டப் பள்ளி கிராமத்திலிருந்து வெளியேறி ஓசூரில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தனர். இங்கு நந்தீஷ் மறக்கடையில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இருவரது உடல்களும் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, நந்தீஷின் சகோதரர் என்.ஷங்கர், நவம்பர் 11ஆம் திகதியன்று ஓசூர் நகர பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
நந்தீஷும் சுவாதியும் சேலை வாங்கிக் கொண்டு ஓசூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் உறவினர் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் உறவினர் வீட்டுக்குப் போனவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை என்றும் தானும் தேடிப்பார்த்து எந்தவித பயனும் இல்லாமல் போனது என்று புகாரில் ஷங்கர் தெரிவிக்க காணாமல் போன பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 13ஆம் திகதி சிவனசமுத்ர பகுதியில் நந்தீஷின் உடல் அழுகிய நிலையில் மாண்ட்யா பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு இரு நாட்கள் கழித்து ஸ்வாதியின் உடல் காவிரி நதியில் கரையொதுங்கியது.
இதனையடுத்து பெலகவடி பொலிஸ் நிலையம் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 329 மற்றும் 201-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பொலிஸ் தரப்பில் கூறப்படுவது என்னவெனில் ஓசூரிலிருந்து குறித்த தம்பதி கடத்தப்பட்டு மாண்ட்யாவில் கொல்லப்பட்டுள்ளனர்.
எல்லா சாதி படுகொலை போலவும் இதிலும் இவர்கள் திருமணத்தை உறவினர்கள் ஏற்றுக் கொண்டதாகவும், இதனையடுத்து சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளதாகவும் என்ற போர்வையில் ஸ்வாதி குடும்பத்தினர் இருவரையும் அழைத்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இருவரும் ஓசூரில் வாழ்வதாக கண்டுபிடித்த பிறகு பொய் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இருவரையும் வாகனத்தில் கடத்தி ஷிம்ஷாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து பொலிஸார் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களில் கொலை நடக்கும் கடைசி தருணங்களில் இருவரும் கடுமையாகப் போராடியிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது கடுமையான வன்முறையை இருவர் மீதும் கொலையாளிகள் பயன்படுத்திய தாக பொலிஸார் தெரிவித்தனர்.
நந்தீஷ் அம்பேத்கரை தீவிரமாக பின்பற்றுபவர், தன் ஆடைகளில் கூட அம்பேத்கர் படத்தைக் கொண்டிருப்பவர். இதை வைத்துத்தான் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஸ்வாதியே கூட இதற்கு முன்பு தன் புகாரில் தங்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு தன் உறவினரே காரணம் என்று கூறியிருந்ததகா நந்தீஷின் உறவினர் முன்ராஜ் என்பவர் த இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.
மேலும் நவம்பர் 11ஆம் திகதி அதிகாலை 2.15 மணிக்கு தன் முதலாளிக்கு நந்தீஷ் அனுப்பிய குறுஞ்செய்தியையும் முன்ராஜ் தி இந்துவிடம் பகிர்ந்து கொண்டார். அதில் “அண்ணா கடத்தல் கனகபுரா” என்ற வாசகம் காணப்பட்டது.
இந்நிலையில் ஸ்வாதியின் குடும்ப உறவினர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்வாதியின் தந்தை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர், தாயார் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். இந்தக் கொலைகளை அடுத்து வன்னியர்கள் அதிகம் வசிக்கும் ஷூலக்கொண்டப்பள்ளி கிராமத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதில் பதற்றம் நிலவுகிறது.