இன்று சபையில்  காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் அனைவரும் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்பது உறுதியாகிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அத்துடன், கசிப்பு விற்பவர்களும், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களும், எத்தனோல் கடத்தியவர்களும், மீன் விற்பனை செய்தவர்களுமே இவர்கள். இவர்களுக்கும் பாராளுமன்றத்தில்  எவ்வாறு நடந்துக்கொள்வதென்பது  தெரியாது. 

இவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டில்  சபாநாயகர் அஞ்சிவிடுவார் என்று எண்ணினார். ஆனால், பிரித்தானியாவில் நான்கு சபாநாயகர்கள் தமது உயிரை அர்ப்பணித்து ஜனநாயகத்தை  பாதுகாத்தது போன்று எமது சபாநாயகரும் ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளார்.  

மேலும் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டபோது பெரும்பான்மை பலம் உள்ளதாக கூறினார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்தவுடனே ஜனநாயகத்துக்கு  மதிப்பளித்து இவர் பதவி விலகியிருக்க வேண்டும். அதைவிடுத்து அராஜகத்தை கையில் எடுக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாரளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் சர்ச்சைக்கு பினனர் ஐக்கிய தேசிய முன்னணியினால் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.