இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை குவித்துள்ளது.

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பாமன இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிக்காக 336 ஓட்டங்களை குவித்தது.

இதன் மூலம் இலங்கை அணி 46 ஓட்டத்துடன் முன்னிலையில் இருந்தது. இந் நிலையில் இரண்டாம் நாள் முடிவான நேற்றைய தினம் இங்கிலாந்து அணி இரண்டவது இன்னிங்ஸில் எதுவித ஓட்டங்களையும் பெறாதிருந்தது.

இந் நிலையில் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 76 ஓட்டங்களை எதிர்கொண்டு 9 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 278 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 124 ஓட்டங்களையும், றொறி பெர்ன்ஸ் 59 ஓட்டங்களையும், பென் போக்ஸ் 54 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டதுடன், ஆடுகளத்தில் பென் போக்ஸ் 51 ஓட்டத்துடனும், அண்டர்சன் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுக்களையும், தில்றூவான் பெரோ 2 விக்கெட்டுக்களையும், மலிந்த புஷ்பகுமார 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

நாளை போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.