(ஆர்.விதுஷா)

விதாரந்தெனிய - பட்டியபொல பகுதியில் கொலை மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். 

தங்காலை வலய குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று காலை 7.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தங்காலை ,மித்தெனிய , அங்குனுகொலபெஸ்ஸ , ஹம்பாந்தோட்டை மற்றும் கொஹூவெல ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற கொலை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

அப சுஜித் 2013 ஆம் ஆண்டு மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கு அமைய கைத செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச்சென்று தலைமறைவாக இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் 45 வயதுடைய கட்டிகட்டுவ,ரன்ன பகுதியை சேர்ந்த ஜூலன்பிட்டிய கமகே சுஜித் குமார எனப்படும் அப சுஜித் , ஆனந்த ஜகத் என்பவர் ஆவார்.

அத்துடன் அவரிடமிருந்து குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, தோட்டாக்கள், மோட்டார்சைக்கிள், கைத்தொலைபேசிகள் உட்பட பலபொருட்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.