இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் அரசியல் நெருக்கடியை அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு இசைவாகவும் ஜனநாயக விழுமியங்களின் வழியிலும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று சர்வதேச சமூகம் பிரயோகித்துவருகின்ற நெருக்குதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தடுமாறவைத்திருக்கிறது.அந்த நெருக்குதல் தொடரவேண்டும் என்று லண்டன் கார்டியன் பத்திரிகை வலியுறுத்தியிருக்கிறது.

 'ஜனாதிபதி எதிர் பிரதமர் ' என்ற தலைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கார்டியன் தீட்டியிருக்கும்  ஆசிரிய தலையங்கத்தில் 'இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் இடம்பெறுகின்ற மோதல்கள் வீதிகளுக்கும் பரவக்கூடும் அல்லது நெருக்கடியில் தலையீடுசெய்யுமாறு பாதுகாப்புப் படைகள் தூண்டப்படக்கூடும் என்ற அச்சத்தையும் சிலர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இலங்கை இராணுவத்துக்கும் பொலிஸுக்கும் பயிற்சிகளை அளித்ததுவரும் அமெரிக்காவும்  மற்றும் பிரிட்டனும் அரசியலமைப்பு நெருக்கடி அரசியலமைப்பு வழிவகைகளின் மூலமாகவே தீர்க்கப்படவேண்டும் என்பதை பாதுகாப்புப் படைகளுக்கு வலியுறுத்தித் தெரிவிப்பது பிரயோசனமானதாக இருக்கும் ' என்று குறிப்பிட்டிருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களும் உச்சநீதிமன்றமும் எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு வரவேற்கப்படவேண்டியதே. அவர்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது என்று கூறியிருக்கும் கார்டியன் மேலும் கூறியிருப்பதாவது ;

எம்மில் பெரும்பாலானவர்கள் தவறுகளுக்காகவே வருந்தியிருக்கின்றோம். ஆனால், இலங்கை ஜனாதிபதி சிறிசேன வழமைக்கு மாறாக தனக்கு கிடைத்தவற்றுக்காக வருந்துகின்றார்.ஒரு பதவிக்காலத்துக்கே ஜனாதிபதியாக இருக்கப்போவதாக சூளுரைத்த சிறிசேன தனது மனதை மாற்றிக்கொண்டுவிட்டார் போலத்தெரிகிறது.

ஜனாதிபதி பதவியில் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் கூட்டுச்சேருவதே உகந்தது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.தனது முன்னாள் எதிரிமீது அவர் இப்போது விசுவாசம் கொண்டிருப்பதை இது காட்டுகிறது.

 ராஜபக்ஷவைப் பொறுத்தவரை தனது சகோதரர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது குறித்தே கவலை கொண்டிருக்கிறார் என்று சிறிசேன நம்பக்கூடும்.

தனது பிரதமர் பதவியைப் பயன்படுத்தி ராஜபக்ஷ நாளடைவில் அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்து மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சிக்கக்கூடும் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். பெரிதும் அஞ்சப்படுகின்றவரான கோதாபய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வழிசெய்யப்படக்கூடும் என்றும் பலர் நினைக்கிறார்கள்.

ஜனாதிபதியும் அவரால் நியமிக்கப்பட்ட பிரதமரும் நாடு ஆளப்படமுடியாததாக மாறிவிட்டது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி புதிய பொதுத்தேர்தல் ஒன்றே நெருக்கடிக்கு தீர்வைத்தரும் என்று காட்டுவதற்கு முயற்சிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

எரிபொருள் விலைக்குறைப்பு போன்ற நிவாரணங்களை மக்களுக்கு வழங்க  ராஜபக்ஷ ஆரம்பித்திருக்கிறார்.அவர் மக்கள் மத்தியில் செல்வாக்குடையவராக இருக்கிறார் என்றாலும் அவரது அரசியல் சமூகங்களுக்கிடையே பேதங்களை வளர்க்கக்கூடியதாக அமைந்திருக்கிறது. தமிழ்த் தீவிரவாதிகளுக்கு எதிரான கொடூரமான  போரில் பாரதூரமான மனித உரிமை மீறல்களைச் செய்ததாகவும் ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

தற்போதைய அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண்பது சாத்தியமே. ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இருவர் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள ஏற்கெனவே மறுத்துவிட்டனர்.

அதனால் ஜனாதிபதியின் தந்திரோபாயம் பிசகிப்போய்விட்டது.ராஜபக்ஷவை சீன் வாழ்த்தியிருந்தாலும் கூட சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்கள் சிறிசேனவைத் தடுமாற வைத்திருக்கின்றன.அந்த நெருக்குதல்கள் தொடரவேண்டும்.